கணவனை காரில் வைத்து எரித்து கொன்ற மனைவி! திரைப்பட பாணியில் குடும்பமே பிளான் பண்ணி செய்த கொடூர கொலை.
கர்நாடகாவில், திரைப்பட பாணியில் தொழிலதிபர் ஒருவரை அவரது குடும்பத்தினரே காருடன் எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் கர்நாடகாவில், சாகர் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் வினோத் (45).
மூலிகைப்பொருள்களை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்திவரும் இவருக்கு வினுதா என்ற மனைவியும், 20 வயதில் விவேக், வினோத் என 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், செப்டம்பர் 29-ஆம் தேதி தீர்த்தஹள்ளி வனப்பகுதியில் கார் ஒன்று பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. காருக்குள் வினோத் சடலமாக கிடந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் யார் என்பது முதலில் தெரியாமல் இருந்தது. ஏனெனில் காரின் பதிவு எண் தவறாக இருந்துள்ளது. காரின் நம்பர் பிளேட் கழற்றப்பட்ட போலி பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட் அதில் பொருத்தப்பட்டிருந்தது.
பின்னர் காரின் சேசிஸ் நம்பரை கொண்டு அதன் உரிமையாளர் வினோத் என்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இதற்கிடையில் வினோத் காணாமல் போனதாக அவரது குடும்பத்தில் இருந்து யாரும் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை.
Picture: TOI
இதனால் பொலிஸுக்கு சந்தேகத்தை ஏற்பட்டு, இதுகுறித்து வினோத் மனைவி மற்றும் மகன்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வினுதா ஒரு மிதமாகவும் அவரது மகன்கள் வேறுவிதமாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியபோது, வினுதா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவர்களை கைது செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய காவல்துறையினர், “வினோத்-க்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான பழக்கம் இருந்துள்ளது. இது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. அந்தப்பெண் சொத்தை அபகரிப்பார் என்ற அச்சத்தில் இருந்த அவரது மனைவி, மகன்கள், வினோத்தின் தம்பி மற்றும் உறவினர் ஒருவர் சேர்ந்து அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து செப்டம்பர் 26-ஆம் திகதி பக்கத்தில் இருந்த பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் வாங்கி வந்துள்ளனர். முதலில் வீட்டில் வைத்து அவரை அடித்துக்கொலை செய்துள்ளனர். பிறகு வீட்டில் படிந்த ரத்தக்கறையை கெமிக்கல் ஊற்றி அகற்றியுள்ளனர்.
பின்னர் ரத்தம் படிந்த ஆடைகள் மற்றும் செருப்புகளை எரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் கழித்து வினோத்தின் உடலை காரில் கட்டிவைத்து இரவு 10.30 மணிக்கு எடுத்துச் சென்று, உள்ளூர் கடைக்காரர் மூலம் காரின் நம்பர் பிளேட்டை மாற்றியுள்ளனர்.
காரில் வினோத்தின் சடலத்தை கொண்டு செல்லும்போது மொபைல் போனை அனைவரும் சுவிட்ச் ஆஃப் செய்துள்ளனர். மீண்டும் வீட்டிற்கு வந்ததும் போனை மீண்டும் ஆன் செய்துள்ளனர். அதேபோல், வினோத்தின் மொபைல்போனை தண்ணீரில் தூக்கி வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.” என்று பொலிஸார் தெரிவித்தனர்.
