விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்பு விசாரணை குழு
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் விவகாரத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த தினேஷ் என்பவர், கரூர் சம்பவம் போல மேலும் நிகழாமல் இருப்பதற்காக அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவிற்கு வழிகாட்டு நெறிமுறைகளை விதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதி என்.செந்தில்குமார் தலைமையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "கரூர் உயிரிழப்பு விவகாரத்தில் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நகர செயலாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதி, "இருவரை கைது செய்ததை தவிர காவல்துறை வேறு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட வாகனம் விபத்து ஏற்பட்ட வீடியோவை உலகமே பார்த்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.
அந்த நேரத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் பேசுகையில், "கரூர் பிரச்சார கூட்டத்திற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் இரண்டை மட்டும் தான் தமிழக வெற்றி கழகம் நிறைவேற்றி இருந்தது.
அதே இடத்தில் 2 நாட்களுக்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர் நடத்திய கூட்டத்திற்கு 137 பொலிஸார் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில், விஜயின் கூட்டத்துக்கு 559 பொலிஸார் பணியில் இருந்தனர்" என்றார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரவிட்டார்.
இதனிடையே தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பு இல்லை என்று நீதிபதி கூறியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |