சுயதனிமைப்படுத்தலில் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன்
கொரோனா பாதிப்பு உறுதி செய்தவருடன் தொடர்பு கொண்டதாக தெரிய வந்ததை அடுத்து பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ள கேட் மிடில்டன், தொடர்ந்து முன்னெடுத்த சோதனைகளிலும் கொரோனா அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம் விம்பிள்டனில் டென்னிஸ் ஆட்டம் காணச் சென்ற நிலையில், தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
இது தொடர்பில் கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட தகவலில், எங்கே எப்போது என குறிப்பிடாமல், கடந்த வாரம் என மட்டும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, செவ்வாய்க்கிழமை இரவு வெம்ப்லி மைதானத்தில் ஜேர்மனிக்கு எதிரான இங்கிலாந்தின் கால்பந்தாட்டம் காணவும் கேட் மிடில்டன் சென்றிருந்தார்.
தற்போது அவருக்கு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்றாலும், பிரித்தானிய அரசின் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என செய்தித்தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக பிரித்தானியர்கள் அனைவரும் NHS செயலி பயன்படுத்தி வருகின்றனர். அதில், கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒருவரை நாம் தெரியாமல் நெருங்கினால், NHS செயலி தாமாகவே நமக்கு எச்சரிக்கை செய்யும்.
தற்போது கேட் மிடில்டன் NHS செயலியின் அந்த எச்சரிக்கையை தவற விட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கேட் மிடில்டன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இளவரசர் வில்லியம் NHS-ன் 75ம் ஆண்டு விழாவுக்கு தனியாகவே செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.