பிரித்தானிய ராணியாரின் இடத்தைப் பிடித்த கேட் மிடில்டன்: நினைவேந்தல் கூட்டத்தில் முதல்முறை
சுதந்திரத்திற்காக போராடி உயிர்விட்ட ராணுவத்தினருக்கான நினைவேந்தல் கூட்டத்தில் முதன்முறையாக பிரித்தானிய ராணியாரின் இடத்தில் கேட் மிடில்டன் பங்கேற்றுள்ளார்.
பிரித்தானியாவில் நினைவேந்தல் ஞாயிறு அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் பொதுவாக நடுநாயகமாக ராணியாரே கலந்து கொள்வது வழக்கம். அவருடன், இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது பிள்ளைகள் குடும்பம் என பங்கேற்பார்கள்.
ஆனால் இந்த முறை ராணியாருக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதால், கடந்த 22 ஆண்டுகளில் முதன்முறையாக நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருகிறார்.
அதற்கு பதிலாக வெளிவிவகார அலுவலகத்தின் பால்கனியில் இளவரசர் வில்லியத்தின் மனைவி கேட் மிடில்டன் இன்று கமிலா மற்றும் சோஃபியுடன் தோன்றியுள்ளார்.
அதேவேளை, இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம், இளவரசி அன் மற்றும் இளவரசர் எட்வர்ட் ஆகியோர் நினைவு மண்டபத்திற்கு மாலை அணிவித்தனர்.
குறித்த நிகழ்வில் கேட் மிடில்டன் உட்பட மூவரும் கருப்பு உடையணிந்து காணப்பட்டனர். கடந்த ஆண்டுகளில் நினைவேந்தல் நிகழ்வில் கேட் மற்றும் கமிலாவுக்கு நடுவே ராணியார் நின்று மரியாதை செலுத்தி வந்துள்ளார். தற்போது, நினைவேந்தல் நிகழ்வில் ராணியார் கலந்துகொள்வதில் சிரமம் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை சுட்டிக்காட்டியுள்ளது.