மீண்டும் ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாயும் பிரித்தானியா: லாபமா நஷ்டமா?
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பெருமளவில் நிதி வழங்கியும், பிரித்தானியாவுக்கு பெரிய லாபம் ஒன்றும் இல்லை, புலம்பெயர்தல் முதலான பல விடயங்களில் ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவைக் கட்டுப்படுத்துகிறது என பல விடயங்களைக் காரணமாக காட்டி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரித்தானியா.
அப்படி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய நிகழ்வு, பிரெக்சிட் என அழைக்கப்படுகிறது. British - exit என்பதன் சுருக்கமே, Brexit என அழைக்கப்படுகிறது.
பிரெக்சிட்டால் பிரித்தானியர்கள் சந்தித்த பிரச்சினைகள்
பிரெக்சிட்டால் பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் மீன்பிடித்தல் விடயத்தில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டன என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே.
அத்துடன், பிரெக்சிட்டால் எல்லைகளில் சரக்குப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டதால், பொருட்கள் கெட்டுப்போகும் அபாயமும் உருவானது.
குறிப்பாக, ஒரே நிலப்பரப்பாக இருந்தும், அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய நாடாகவும், வட அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய நாடாக இல்லாமலும் இருந்ததால், வட அயர்லாந்து மக்கள், பிரித்தானியாவின் பிற பகுதிகளிலிருந்து அனுப்பப்படும் உணவுப்பொருட்களைப் பெற இயலாமல் தவித்தார்கள்.
பிரெக்சிட்டைப் பார்த்து, பிரித்தானியாவிலிருந்தே பிரிந்து தனி நாடாகவேண்டும் என்னும் எண்ணம் ஸ்கொட்லாந்து நாட்டவர்களுக்கு உருவானது இன்னொரு சுவாரஸ்ய விடயம்!
ஆக, பிரெக்சிட்டால் பிரித்தானியா என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தது என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெளிவாகப் புரியும்.
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாயும் பிரித்தானியா
இந்நிலையில், பிரித்தானியாவில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள சர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு, மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறது.
ஆனால், மக்கள் வாக்களித்து பிரெக்சிட்டை நிறைவேற்றிய நிலையில், மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயலாற்றுவதற்கு பிரித்தானியாவில் எதிர்ப்பும் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயலாற்றும் தனது அரசின் திட்டம் குறித்து பிரதமர் ஸ்டார்மர் விளக்கமளித்துள்ளார்.
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையவில்லை. பிரித்தானியாவுக்கு நன்மை ஏற்படும் வகையில், சிறந்த சேவைகளைப் பெறுவதற்காக, மக்களுக்கு பயனளிக்கும் ஒரு நல்ல ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ளவே நாம் விரும்புகிறோம் என்கிறார் ஸ்டார்மர்.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியமோ, 30 வயதுக்குக் கீழுள்ள ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் மக்கள், பிரித்தானியாவில் தடையில்லாமல் வேலை செய்யவும், பயணிக்கவும், அதேபோல பிரித்தானியர்களும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தடையில்லாமல் சென்றுவரவும் ஆவன செய்யவேண்டும் என வலியுறுத்திவருகிறது.
எனவே, மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகள், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு ஏற்ப பிரித்தானியா நடக்கவேண்டிய நிலை உருவாகிவிடும் என பிரெக்சிட் ஆதரவாளர்கள் உட்பட ஒரு தரப்பினர் அஞ்சுகிறார்கள்.
நடப்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |