பிரதமராகும் கெய்ர் ஸ்டார்மர்... பிரித்தானியாவில் உடனடி நிகழவிருக்கும் 11 பெரும் மாற்றங்கள்
பிரித்தானியாவின் புதிய பிரதமராக லேபர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்கவிருக்கும் நிலையில், லேபர் ஆட்சியின் கீழ் உடனடி நிகழவிருக்கும் 11 பெரும் மாற்றங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
லேபர் கட்சியின் 6 வது தலைவர்
நீண்ட 14 ஆண்டுகள் சிக்கனம், குழப்பம் மற்றும் திறமையின்மை உள்ளிட்ட காரணிகளால் தடுமாறி வந்த பிரித்தானியா தற்போது விழித்துக்கொண்டு புதிய அரசாங்கத்திற்கு வாய்ப்பளித்துள்ளது.
நாட்டின் 58வது பிரதமராக இன்று கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்க உள்ளார். பிரதமர் பொறுப்புக்கு வரும் லேபர் கட்சியின் 6 வது தலைவர் கெய்ர் ஸ்டார்மர். அடுத்த 10 ஆண்டுகளுக்கு தாம் பிரதமராக நீடிக்க விரும்புவதாக கூறும் கெய்ர் ஸ்டார்மர், பிரித்தானியாவுக்கு புதிய நம்பிக்கையை அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் லேபர் ஆட்சியின் கீழ் உடனடி நிகழவிருக்கும் 11 பெரும் மாற்றங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. முதலில், NHS எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்த்துக்கொள்ள லேபர் ஆட்சி நடவடிக்கை எடுக்கும் என்றே கூறப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் இங்கிலாந்தில் 40,000 மாலை மற்றும் வார இறுதி சந்திப்புகளை வழங்குவதாக லேபர் கட்சி உறுதியளித்துள்ளது. மட்டுமின்றி, புற்றுநோய் கண்டறிவது தொடர்பில் NHS-ல் ஸ்கேனர்கள் எண்ணிக்கையை இருமடங்காக லேபர் கட்சி நடவடிக்கை எடுக்கும்.
இதற்கு 250 மில்லியன் பவுண்டுகள் செலவாகும் என்றே கூறப்படுகிறது. உளவியல் மற்றும் பல் சுகாதாரமும் கருத்தில் கொள்ளப்படும். 2வதாக பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க, புதிதாக 6,500 பேர்களை நியமிக்க உள்ளனர்.
VAT, வருமான வரி
ஆரம்பப் பள்ளிகளில் இலவச காலை உணவு திட்டம் மற்றும் 3,000 பள்ளி சார்ந்த நர்சரிகளை உருவாக்கவும் லேபர் அரசாங்கம் முடிவெடுக்கும். 3வதாக குடியிருப்பு தொடர்பான நெருக்கடிக்கு தீர்வு காண உள்ளது.
இதன் பொருட்டு, புதிதாக 1.5 மில்லியன் குடியிருப்புகள் உருவாக்கப்படும். 4வதாக, முதியோர் காப்பகங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படும், அத்துடன் காப்பகங்களில் தங்கியுள்ள முதியவர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்கும் உரிமை அளிக்கப்படும்.
5வதாக, VAT, வருமான வரி மற்றும் தேசிய காப்பீடு உள்ளிட்டவைகள் உயர்த்தப்படாது. 6வதாக, தொழிலாளர்கள் உரிமைகள் காக்கப்படும். அத்துடன் நெறிமுறையற்ற பணி நீக்கம் மற்றும் பணியமர்த்தல் நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டுவரப்படும்.
ருவாண்டா திட்டம்
7வதாக, காவல்துறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது. ninja வாள்களுக்கு தடை உறுதி. 8வதாக, புதிய கால்பந்து நிர்வாக பிரேரணை கொண்டுவரப்படும். கால்பந்து ரசிகர்களின் உரிமைகள் காக்கப்படும்.
9வதாக, 2030 முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனை முடிவுக்கு கொண்டுவரப்படும். இதனால் மின்சார வாகனங்களுக்கு பிரித்தானியா மாறும் நிலை வரும்.
10வதாக, மின் நுகர்வு கட்டணங்கள் குறைக்கப்படும், விளாடிமிர் புடின் போன்றவர்கள் இதில் தலையிடுவதை கட்டுப்படுத்தப்படும். 11வதாக, ருவாண்டா அரசாங்கத்திற்கு பிரித்தானிய மக்களின் வரிப்பணத்தை அள்ளித்தருவது நிறுத்தப்படும்.
அத்துடன் விவாதத்துக்குரிய ருவாண்டா திட்டம் கைவிடப்படும். மட்டுமின்றி, சட்டவிரோத புலம்பெயர் மக்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |