ஃபெங்கல் புயல் பாதிப்பு.., தமிழகத்திற்கு உதவ முன்வரும் கேரள அரசு
ஃபெங்கல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்கு உதவ கேரள அரசு முன்வரும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
உதவும் கேரளா
ஃபெங்கல் புயல் காரணாமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தற்போது, புயல் கரையை கடந்த பின்னரும் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் வடியவில்லை. இதனால், அங்குள்ள மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
முக்கியமாக, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புயலின் தாக்கம் அதிகரித்ததால் கனமழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பல குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றன. இந்த மண்சரிவில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஃபெங்கல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ஃபெங்கல் புயலால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்கள் மீதே எங்களது எண்ணங்கள் உள்ளன. இந்த சவாலான நேரத்தில் கேரளா அண்டை மாநிலங்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது.
தமிழகத்திற்கு தேவையான எந்த உதவியையும் வழங்க தயாராக உள்ளது. ஒன்றுபட்டு இதை முறியடிப்போம்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |