தமிழகத்திற்கு வந்த கேரள தம்பதி புகைப்படம் அனுப்பிவிட்டு எடுத்த விபரீத முடிவு!
தமிழகத்தின் திண்டுக்கலில் மாவட்டத்தில் தங்கும் விடுதியில் கேரள தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரளாவை சேர்ந்த தம்பதி சுகுமாரன்-சத்தியபாமா. திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு சென்ற இந்த தம்பதி, சாமி தரிசனத்திற்கு வந்திருப்பதாக கூறி தனியார் விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நேற்றிரவு சிலர் விடுதியின் முன்பு அழுதுகொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த விடுதியில் வேலை செய்யும் நபர் விசாரித்தபோது, சுகுமாரன்-சத்தியபாமா தம்பதி தங்கள் உறவினர்கள் என்று கூறியுள்ளனர்.
மேலும், குறித்த தம்பதி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி, விடுதி முன்பு நின்று புகைப்படம் எடுத்து தங்களுக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக விடுதிக்கு விரைந்த பொலிசார், அறையின் உள்ளே சென்று பார்த்தபோது தம்பதியர் தூக்கில் தொங்கியபடி இறந்துள்ளனர். பின்னர் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் எங்கள் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. நாங்கள் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை என எழுதப்பட்டிருந்தது. எனினும் பொலிசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.