லொட்டரியில் அடித்தது ரூ.1 கோடி.., பழனி பாதயாத்திரை சென்ற கேரள பக்தருக்கு சில மணி நேரத்தில் அதிர்ஷ்டம்!
பழநிக்கு பாதயாத்திரை சென்ற பக்தருக்கு காலையில் வாங்கிய லொட்டரிக்கு மாலையில் ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது.
பழனிக்கு பாதயாத்திரை
இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள மூணாறு அருகே குண்டளை எஸ்டேட் புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவன் (45). இவர் அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் பழனி கோவிலுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம்.
அதே போல இந்த ஆண்டும் நேற்று முன்தினம் காலை மூணாறில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து 245 பேர் கொண்ட குழுவுடன் பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றார். அவருடன் மகன்களான பரத், ரஞ்ஜித் ஆகிய இருவரும் சென்றுள்ளனர்.
அப்போது மூணாறில் இருந்து 3 கி.மீ தொலைவில் பெரியவாரை எஸ்டேட் பகுதியில் இருக்கும் டீக்கடை ஒன்றில் டீ வாங்கி குடித்துள்ளனர். அந்த இடத்தில் லொட்டரி விற்றவரிடம் இருந்து கேரள அரசின் பிப்டி பிப்டி லொட்டரி டிக்கெட் ஒன்றை பரமசிவன் வாங்கியுள்ளார்.
ரூ.1 கோடி பரிசு
பின்னர், பயணத்தை தொடர்ந்து 42 கி.மீ நடந்து மாலையில் மறையூருக்கு சென்றனர். அப்போது அவர் வாங்கிய லொட்டரிக்கு அன்றைய தினமே குலுக்கல் என்பதால் செய்தித்தாளை வாங்கி தேடி பார்த்துள்ளார்.
அதை பார்த்த போது தான் பரமசிவனுக்கு பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர் காலையில் வாங்கிய லொட்டரிக்கு மாலையிலேயே ரூ.1 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது.
உடனே அவர், அந்த லொட்டரி சீட்டை பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்துவிட்டு பாதயாத்திரையை தொடங்கினார். பழனி முருகன் அருளால் ரூ.1 கோடி பரிசு விழுந்ததாக கூறிய பரமசிவன், அந்த பணத்தை வைத்து சொந்த வீடு கட்ட போவதாக கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |