FIFA உலகக் கோப்பை 2022 போட்டிகளை காண ரூ.23 லட்சத்திற்கு வீடு வாங்கிய கேரள கால்பந்து ரசிகர்கள்!
FIFA உலகக் கோப்பை 2022 போட்டிகளை ஒன்றாக இணைந்து பார்க்க கேரளாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் 17 பேர் சேர்ந்து ரூ.23 லட்சத்திற்கு தனி வீடு ஒன்றை வாங்கியுள்ளனர்.
கத்தாரில் இன்று 2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கும் நிலையில், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு மத்தியில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ரசிகர்கள், கால்பந்து மீதான தங்கள் அன்பை வேறு விதமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
ரூ.23 லட்சத்திற்கு வீடு
கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தில் உள்ள முண்டக்காமுகல் என்ற சிறிய கிராமத்தில் உள்ள கால்பந்து ரசிகர்கள், FIFA உலகக் கோப்பையை கொண்டாடுவதற்காகவே 23 லட்சம் ரூபாய் செலவில் கிராமத்தில் வீடு வாங்கியுள்ளனர்.
ANI
இந்த கிராமத்தைச் சேர்ந்த 17 கால்பந்து ரசிகர்களின் கூட்டு முயற்சியால் இந்த வீட்டை வாங்குவது சாத்தியமாகியுள்ளது. அவர்கள் இந்த வேட்டை வாங்க ரூ.23 லட்சத்தை பகிர்ந்துள்ளனர்.
அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய ஜாம்பவான்களின் உருவப்படங்களுடன் அலங்கரித்துள்ளனர். மேலும் பிரேசில், அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் வண்ணங்களை அவர்கள் தங்கள் புது வீட்டிற்கு வர்ணம் பூசியுள்ளனர். இது தவிர, பல வீரர்கள் மற்றும் அணிகளின் கட்அவுட்டுகளை அவர்கள் அந்த வீட்டில் வைத்துள்ளனர்.
இந்த 17 பேர் கொண்ட குழு, இப்படியொரு வீட்டை வாங்க முடிவு செய்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, கடந்த 15-20 ஆண்டுகளாக ஒன்றாக கால்பந்து விளையாட்டுகளைப் பார்க்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
FIFA 2022-க்கு பின்..
"எதிர்காலத்தில், எங்கள் அடுத்த தலைமுறையும் இந்த கால்பந்து வீட்டை அனுபவிக்க முடியும், மேலும் அவர்களின் ஒற்றுமை தொடரும்" என்று குழுவில் ஒருவரான ஷெஃபீர் கூறினார்.
TwentyFourNews
"நாங்கள் ஒரு பெரிய டிவி வாங்க திட்டமிட்டுள்ளோம். அனைத்து தலைமுறை பார்வையாளர்களும் இங்கு வந்து ஒன்றாக விளையாட்டை ரசிக்க நாங்கள் ஏற்பாடு செய்வோம்" என்றும் அவர் கூறினார்.
FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 நவம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணிக்கு (IST) தொடங்குகிறது. இந்தப் போட்டியில் எட்டு குழுக்களில் 32 அணிகள் பங்கேற்கும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.