யூடியூப் பார்த்து டயட் - 6 மாதங்களாக உணவை தவிர்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
6 மாதங்களாக உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றிய இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
6 மாத டயட்
கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஸ்ரீநந்தா என்ற இளம்பெண், கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.
இவர் கடந்த 6 மாதங்களாக Youtube வீடியோக்களை பார்த்து தீவிர உணவுக்கட்டுப்பாட்டை(டயட்) பின்பற்றி வந்துள்ளார். உணவை முற்றிலும் தவிர்த்து விட்டு, நீர், காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.
உயிரிழப்பு
இதனால் அவர் உடல் எடை வெகுவாக குறைந்ததால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முறையாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியதோடு, அவருக்கு மனநல ஆதரவு தேவை என அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் அவரது பெற்றோர் உணவு வழங்கிய போது அதை ஏற்க மறுத்து வெந்நீரை மட்டும் அருந்தியுள்ளார். இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, 2 மாதத்திற்கு முன்னர், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
இரு வாரங்களுக்கு முன்னர் சர்க்கரை அளவு வெகுவாக குறைந்ததால், தலசேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனைக்கு வந்த போது, அவர் 24 கிலோவிற்கு குறைவான உடல் எடையுடனே இருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அனோரெக்ஸியா நெர்வோசா
அந்த இளம்பெண், அனோரெக்ஸியா நெர்வோசா(anorexia nervosa) என்ற உளவியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் எடை வழக்கமான அளவில் இருந்தால் கூட, அதிக உடல் எடையுடன் இருப்பதாக நினைத்து, அதை குறைக்க தீவிர முயற்சி செய்வார்கள்.
ஒரு கட்டத்தில், இவர்களுக்கு பசி என்ற இயற்கையான உணர்வே மறைந்து விடும். மேற்கத்திய நாடுகளில் இருந்த இந்த நோய், தற்போது இந்தியாவிலும் அரிதாக காணப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |