கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை! அகால மரணத்தால் கதறும் பெற்றோர்
இந்திய மாநிலம் கேரளாவில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விடுதியில் தங்கி பயின்ற மாணவி
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஷ்ரத்தா (20). இவர் பொறியியல் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஷ்ரத்தா தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனைக் கண்ட சக தோழிகள் பயத்தில் அலறியுள்ளனர் அதன் பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி மரணம்
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். தங்கள் மகளின் திடீர் மரணத்தால் ஷ்ரத்தாவின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதனையடுத்து ஷ்ரத்தாவை மனதளவில் ஆசிரியர்கள் துன்புறுத்தியதாலேயே அவர் இந்த முடிவை எடுத்ததாக மாணவனின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தங்கள் மகளின் செல்போனை ஆசிரியர்கள் பறித்துக் கொண்டபோது, துறைத்தலைவர் மாலை அழைத்து பேசி, துன்புறுத்தியுள்ளதாக ஷ்ரத்தாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஷ்ரத்தா குறைவான மதிப்பெண்கள் பெற்றதாக கல்லூரி நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு அறையில் இருந்து மாணவி வெளியேறியுள்ளார்.
தோழிகளின் கூற்று
அதேபோல் கல்லூரி அதிகாரிகளும், அவரை தற்கொலை செய்ய நெருக்கடி கொடுத்தனர் என்று மாணவியின் தோழிகளும் கூறியுள்ளனர்.
மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டி மாணவர் அமைப்புகள் பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது.
அத்துடன் விடுதி மாணவிகளும் வெளியேற்றப்பட்டுள்ளார். இதற்கிடையில், மருத்துவமனையில் ஷ்ரத்தா அனுமதிக்கப்பட்டபோது அவர் மயக்கமடைந்ததாக கல்லூரி நிர்வாகம் மருத்துவர்களிடம் கூறியுள்ளது.
ஆனால், மாணவி தற்கொலைக்கு முயன்றதை அவர்கள் தெரிவித்திருந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கும் என ஷ்ரத்தாவின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.