நீ அழகாக இல்லை... கணவரின் தொடர் அவமானம், சித்திரவதைக்கு பலியான பெண்
கடந்த வாரம் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவர் குடும்பத்தினர் அளித்த புகாரின் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அவமானப்படுத்தி
தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் கணவன் அல்லது அவர்களது உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட விஷ்ணுஜா கடந்த 2023 மே மாதம் பிரபின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணம் முடித்த சில நாட்களிலேயே பிரபின், தமது மனைவி விஷ்ணுஜாவை தொடர்ந்து அவமானப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
விஷ்ணுஜா அழகாக இல்லை என்றும், அவருக்கு வேலை கிடைக்காததை குறிப்பிட்டும் அவமானப்படுத்தி வந்ததாக அவருடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் செவிலியரான பிரபின் தமது மனைவியை அடித்துத் துன்புறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விஷ்ணுஜாவின் தந்தை வாசுதேவன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அவள் மிகவும் ஒல்லியாக இருப்பதாக கூறி அவமானப் படுத்தி வந்ததாகவும், அவள் அழகற்றவள் என்று கூறி, அவளை தனது பைக்கில் அழைத்துச் செல்லவும் பிரபின் அனுமதிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு, பிரபின் தனது மனைவியிடம் ஒரு வேலையைப் பெற்றுக்கொள்ளச் சொன்னதாகவும், அவருடைய சம்பளத்தில் அவள் வாழ முடியாது என்று கூறி தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது.
பெற்றோர்களிடம் சொல்லவில்லை
ஆனால் விஷ்ணுஜா வேலைக்காக முயற்சிகள் மேற்கொண்டும் எதுவும் அமையவில்லை என்றே தெரிய வந்துள்ளது. விஷ்ணுஜா தனக்கு நடந்த துன்புறுத்தல் பற்றி பெற்றோர்களிடம் சொல்லவில்லை, அவள் இறந்த பிறகுதான் அவளுடைய நண்பர்களிடமிருந்து அதைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
நாங்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டபோது, அவள் எங்களுக்கு ஆதரவளித்தாள். ஆனால் அவளுடைய திருமணப் பிரச்சினைகளில் நாங்கள் தலையிட அவள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்றார் வாசுதேவன்.
தமது மகள் கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்புள்ளதாகவும், அவள் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுக்கமாட்டார் என்றும் வாசுதேவன் முறையிட்டுள்ளார்.
பிரபின் தனது மனைவியின் வாட்ஸ்அப் உரையாடலை கண்காணித்து வந்ததால், விஷ்ணுஜா ரகசியமாக டெலிகிராம் செயலியை பயன்படுத்தி, தமது நிலையை நெருங்கிய தோழி ஒருவரிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |