இந்தியாவில் மிக முக்கியமான பொருளை தொலைத்த கெவின் பீட்டர்சன் - கடுப்பான ரசிகர்கள்
தனது பான் கார்டை தொலைத்துவிட்டதாக கூறிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் சொன்ன சில நிமிடங்களில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த கெவின் பீட்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் தற்போது தொலைக்காட்சி வர்ணனையாளர் மற்றும் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
ஐபிஎல் தொடர் மூலம் இந்தியாவில் நன்கு பிரபலமான அவர் அடிக்கடி இந்தியாவுக்கு வருகை தருவது வழக்கம். இந்நிலையில் தனது பான் கார்டை எங்கோ தவறவிட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பீட்டர்சன் இந்தியா தயவு செய்து உதவுங்கள் , நான் எனது பான் கார்டை தவறவிட்டுவிட்டேன். நான் பணி நிமத்தமாக இந்தியா வந்திருப்பதால் எனக்கு பான் கார்ட் அவசரமாக தேவைப்படுகிறது. இதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறி உதவுங்கள் என ட்வீட் போட்டார்.
இதற்கு அடுத்த 40வது நிமிடங்களில் இந்திய வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. தங்களது ட்விட்டர் பக்கத்தில், " பீட்டர்சன், நாங்கள் உங்களுக்கு உதவுவதற்காக தான் உள்ளோம். நாங்கள் அனுப்பியுள்ள ஒரு லிங்க்-ல் உங்களது பான் கார்ட் விவரங்களை பதிவு செய்து மீண்டும் புதிதாக ஒன்றை உடனடியாக பெற்றுக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளது. ஒருவேளை விவரங்கள் தெரியவில்லை என்றால் மெயில் அனுப்புங்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பிரபலத்திற்கு உதவி வேண்டும் என்றவுடன் இந்திய வருமான வரித்துறையே இறங்கி வந்து உதவி செய்கிறது. ஆனால் இந்திய மக்களில் எத்தனை பேருக்கு இதுபோன்ற உடனடி பதில்களை கொடுத்துள்ளீர்கள் என கேள்வியெழுப்பியுள்ளனர்.