ஜேர்மனியில் இளம்பொலிசார் இருவர் கொல்லப்பட்ட சம்பவம்... சம்பவ இடத்தில் சிக்கிய முக்கிய துப்பு
திங்கட்கிழமை காலை, இளம்பொலிசார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், நபர் ஒருவரின் அடையாள அட்டை ஒன்று கிடைத்துள்ளதைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை காலை, 29 வயதுடைய ஆண் பொலிசார் ஒருவரும், 24 வயதுடைய பெண் பொலிசார் ஒருவரும் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள். அந்தப் பெண் இன்னமும் தன் பொலிஸ் பயிற்சியில்தான் இருந்திருக்கிறார்.
அப்போது, அவர்கள் ஒரு வாகனத்தைத் தடுத்து நிறுத்த, அதற்குள் ஏராளமான வன விலங்குகள் இருந்திருக்கின்றன. அதை அந்த பொலிசார் கண்டுபிடித்ததும், அந்த வாகனத்தில் இருந்தவர்கள் பொலிசாரை நோக்கி சுடத் துவங்கியுள்ளார்கள்.
அதில், அந்தப் பெண் பொலிசார் தலையில் குண்டு பாய்ந்து உடனடியாக இறந்துவிட்டார். அந்த ஆண் பொலிசார் மீது நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளன. சக பொலிசாரை உதவி கோரி அழைத்த நிலையிலும், அவர்கள் வருவதற்குள், அவரும் உயிரிழந்துவிட்டிருக்கிறார்.
துப்பாக்கியால் சுட்டவர்கள் தப்பியோடிவிட, அதில் ஒருவரது அடையாள அட்டை, இறந்து கிடந்த பெண் பொலிசாரின் உடல் அருகே விழுந்து விட்டிருக்கிறது.
அதைக் கொண்டு பொலிசார் இருவரைக் கைது செய்துள்ளார்கள்.
அவர்களிடமிருந்து ஏராளம் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள், சட்ட விரோதமாக வேட்டையாடுபவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
என்றாலும், சட்ட விரோதமாக வேட்டையாடுவது தெரியவந்ததற்காக பொலிசார் இருவரைக் கொல்வதாக என நாடே கொந்தளிக்கிறது.
இது போன்ற துப்பாக்கிக் கலாச்சாரம் ஜேர்மனியில் குறைவு என்பதும், ஐரோப்பாவிலேயே கடுமையான ஆயுதக் கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டுள்ள நாடு ஜேர்மனி என்பதும் குறிப்பிடத்தக்கது.