பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மேக்ரான்: ஐந்து முக்கிய விடயங்கள்
பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணமாக வந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அவரது உரையில் ஐந்து முக்கிய விடயங்கள் இடம்பெற்றன.
1. பிரெக்சிட்டால் ஏற்பட்ட பிரிவை சரி செய்யவேண்டும்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும் பாதுகாப்பு முதலான முக்கிய விடயங்கள் மூலம் ஒரு ஐரோப்பிய கண்டமாக நாம் இணைக்கப்பட்டுள்ளதால், பிரித்தானியா தனித்துவிடப்படமுடியாது என்றார் மேக்ரான்.
அத்துடன், தடையில்லா இயக்க திட்டம் இல்லாவிட்டால், இரு தரப்பும் பிரிய வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இளைஞர்கள் அந்நியர்கள் போல் மாறிவிட வாய்ப்புள்ளதாகவும், அதை சரி செய்யவேண்டும் என்றும் தெரிவித்தார்.
2. சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவேண்டும்
இன்னொரு நாட்டில் சென்று நல்லதொரு வாழ்வைத் தேடிக்கொள்வதில் தவறில்லைதான். ஆனாலும், மனித உயிர்களுக்கு மதிப்பளிக்காமல் கிரிமினல்கள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதை அனுமதிக்கமுடியாது என்றார் மேக்ரான்.
ஆகவே, சட்டவிரோத புலம்பெயர்தலை மனிதாபிமானத்துடன் எதிர்கொள்வது பிரித்தானியாவும் பிரான்சும் இணைந்துமேற்கொள்ளவேண்டிய கடமை என்றார் அவர்.
3. உக்ரைனை கைவிடக்கூடாது
உக்ரைன் விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதி எடுத்துள்ளன. அது, உக்ரைனை ஐரோப்பியர்கள் கைவிடமாட்டார்கள் என்பதற்கான சமிக்ஞை என்று கூறினார் மேக்ரான்.
4. அமெரிக்கா மற்றும் சீனாவை அதிக அளவில் சார்ந்திருக்ககூடாது
ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா மற்றும் சீனாவை அதிக அளவில் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று கூறிய மேக்ரான், நாம் உலக நாடுகளுடன் ஒத்துழைக்க விரும்புகிறோம், ஆனால் சார்ந்திருக்க அல்ல என்றார்.
5. காசாவில் வாழ்பவர்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்
அவசரமாக காசாவில் வாழ்பவர்கள் மற்றும் பிணைக்கைதிகளின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று கூறிய மேக்ரான், முடிவோ இலக்கை அடையும் யுக்தியோ இல்லாமல் நடைபெறும் போரில், போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |