அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு கொலை... விசாரணை தொடங்கிய பிரெஞ்சு நீதிபதி
பத்திரிகையாளர் ஜமால் காஷோகி படுகொலை குறித்த விசாரணையை மீண்டும் முன்னெடுக்க பிரெஞ்சு நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாரிஸ் நீதிமன்றம்
பிரான்ஸின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தரணிகள் அலுவலகம் சனிக்கிழமை இதை தெரிவித்துள்ளது. காஷோகி படுகொலை வழக்கை விசாரணைக்கு உகந்தது என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையிலேயே அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் PNAT தெரிவிக்கையில், சித்திரவதை மற்றும் வலுக்கட்டாயக் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய இந்த விசாரணை, மனித உரிமைக் குழுக்களான 'TRIAL International' மற்றும் 'Reporters Without Borders' ஆகியவை தாக்கல் செய்த புகார்களை விசாரணைக்கு ஏற்கத்தக்கவை என பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் மே 11 அன்று அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.
ஆனால், காஷோகி பணியாற்றியுள்ள DAWN நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட தனிப் புகார், விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தீர்ப்பளிக்கப்பட்டது எனவும் PNAT தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2018-இல், இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில், சவுதி அதிகாரிகளால் காஷோகி கொல்லப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை முன்னெடுத்த ரகசிய விசாரணையில் அம்பலமானது.
காஷோகி படுகொலைக்கு சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டதாகவும் கருதப்பட்ட நிலையிலேயே அமெரிக்க உளவுத்துறை விசாரணை மேற்கொண்டது.

பைடன் நிர்வாகம்
ஆனால், காஷோகி கொலைக்கு உத்தரவிட்டதை மறுத்த பட்டத்து இளவரசர் சல்மான், அச்சம்பவம் தனது கண்காணிப்பில் நடந்ததை ஒப்புக்கொண்டார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இந்தப் படுகொலையில் இதுவரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நீதித்துறை நடவடிக்கைகளைக் கண்டுள்ளதை அடுத்து, பிரெஞ்சு விசாரணை ஒரு புதிய சட்டரீதியான முன்னெடுப்பை அறிவித்துள்ளது.
2022-ல் ஒரு துருக்கிய நீதிமன்றம், 26 சவுதி சந்தேக நபர்கள் மீதான தனது சொந்த விசாரணையை நிறுத்தி, அந்த வழக்கை சவுதி அரேபியாவுக்கு மாற்றியது. இந்தத் தீர்ப்பு மனித உரிமை அமைப்புகளிடமிருந்து கண்டனத்தைப் பெற்றது.

மட்டுமின்றி, பின் சல்மான் பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பைடன் நிர்வாகம் அவருக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கியது; இதன் விளைவாக, காஷோகியின் வருங்கால மனைவி தொடர்ந்த உரிமையியல் வழக்கை ஒரு ஃபெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வெளிநாடுகளில் நிகழ்த்தப்படும் சில கடுமையான குற்றங்கள் குறித்து விசாரணைகளைத் தொடங்க பிரெஞ்சு சட்டம் நீதிபதிகளை அனுமதிக்கிறது, இருப்பினும், வழக்குத் தொடரப்படுவதற்கு பொதுவாக சந்தேக நபர்கள் பிரெஞ்சு மண்ணில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |