உஸ்மான் கவாஜா முன்வைத்த சாண்ட் பேப்பர் குற்றச்சாட்டு: இது 100% தவறானது என மறுத்த பேட் கம்மின்ஸ்
Usman Khawaja’s Sandpaper Allegations Pat Cummins Rejects: உஸ்மான் கவாஜாவின் முன்வைத்த சாண்ட் பேப்பர் குற்றச்சாட்டுகளை அவுஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்(Pat Cummins) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
உஸ்மான் கவாஜாவின் சாண்ட் பேப்பர் குற்றச்சாட்டு
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான உஸ்மான் கவாஜா(Usman Khawaja) சமீபத்தில் வெளியிட்ட தன்னுடைய சுயசரிதை நூலான சப்ர்(Sabr) புத்தகத்தில், கடந்த 2018ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப் டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் சாண்ட் பேப்பர் கொண்டு பந்தை சேதப்படுத்தியது (Ball-tampering) அவுஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவருக்கும் தெரியும் என்று பரபரப்பு தகவலை குறிப்பிட்டு இருந்தார்.

அத்துடன் இதற்கு ஒட்டுமொத்த அணியும் பொறுப்பேற்க வேண்டும் என்றும், தன்னுடைய கோரிக்கையை பெயர் குறிப்பிடாத இரண்டு வீரர்கள் தடுத்து விட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அப்போது ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர் நீண்ட கால தடையை எதிர்கொண்டு இருந்தனர்.
திட்டவட்டமாக மறுத்த பேட் கம்மின்ஸ்
இந்நிலையில் உஸ்மான் கவாஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சிட்னியில் உள்ள உள்அரங்க கிரிக்கெட் மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜாவின் கூற்றுகளை 100% தவறானது என்றும், முற்றிலும் அபத்தமானவை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 8 ஆண்டுகளாக இதைத்தான் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன், சாண்ட் பேப்பர் கொண்டு பந்தை சேதப்படுத்தும் திட்டத்தை நானும், மற்ற வீரர்களும் இணைந்து செய்தோம் என்ற கூற்று முற்றிலும் அபத்தமானது என காட்டமாக தெரிவித்துள்ளார்.

உஸ்மான் கவாஜா உடனான நீண்ட கால நட்புறவை நினைவு கூர்ந்த பேட் கம்மின்ஸ், நெருங்கிய நண்பர் ஒருவராலேயே இப்படி குற்றம் சுமத்தப்படுவது மிகவும் வேதனையாக இருப்பதாகவும், உண்மையான நண்பர்கள் ஒருவருக்கொருவர் அவர்களின் வாழ்க்கையுடனும், நற்பெயருடனும் இப்படி விளையாட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
புத்தகம் வெளியான பிறகு கவாஜா மற்றும் ஸ்மித் உடன் பேசியதாகவும், ஆனால் டேவிட் வார்னர் உடன் பேசவில்லை என்று கம்மின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.