Kia இந்தியாவில் 2-வது கார் உற்பத்தி ஆலையை அமைக்க திட்டம்
Kia to Launch New India Plant for EVs by 2030: Kia இந்தியாவில் 2-வது கார் உற்பத்தி ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
Kia இந்தியாவில் 2-வது கார் உற்பத்தி ஆலை
இந்தியாவில் தனது உற்பத்தி திறனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் தென் கொரிய வாகன உற்பத்தியாளரான கியா நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் இரண்டாவது கார் உற்பத்தி ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய ஆலை 2030-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உற்பத்தியை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் பெட்ரோல் கார்கள் மற்றும் மின்சார வாகனங்கள் (EV) இரண்டும் தயாரிக்கப்படவுள்ளன.
ஆந்திரப் பிரதேச அரசுடன் கியா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. புதிய ஆலை அனந்தபூரில் அமைக்கப்பட உள்ளது. தற்போது செயல்பட்டு வரும் கியாவின் முதல் இந்திய ஆலைவும் அதே பகுதியில் உள்ளது.
ரூ.18,750 கோடிக்கு மேல் முதலீடு
இந்த திட்டத்திற்காக கியா மற்றும் அதன் பங்குதார நிறுவனங்கள் இணைந்து சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர், அதாவது ரூ.18,750 கோடிக்கு மேல் முதலீடு செய்ய உள்ளன. 465 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த ஆலையின் வருடாந்திர உற்பத்தி திறன் 2 லட்சம் வாகனங்களாக இருக்கும்.
இதன் மூலம் இந்தியாவில் கியாவின் மொத்த உற்பத்தி திறன் தற்போதைய 4.3 லட்சம் வாகனங்களிலிருந்து 6.3 லட்சம் வாகனங்களாக உயரவுள்ளது.
இந்த ஆலையில் வாகன ஸ்டாம்பிங், வெல்டிங், பெயிண்டிங் மற்றும் இறுதி அசெம்பிளி உள்ளிட்ட அனைத்து உற்பத்தி பணிகளும் மேற்கொள்ளப்படும். மின்சார வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் மின்சார வாகனங்களை ஒரே ஆலையில் தயாரிப்பது கியாவுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும். மேலும், புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும், ஏற்றுமதி சந்தைகளில் தனது பங்களிப்பை அதிகரிக்கவும் இந்த ஆலை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடையார் ஆனந்த பவன் உணவகத்தில் 180 மில்லியன் டொலர் முதலீடு - பெரும்பான்மை பங்குகளை வாங்கும் பில்லியனர்
வேலைவாய்ப்புகள்
இந்த திட்டத்தின் மூலம் ஆந்திரப் பிரதேசத்தில் சுமார் 12,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். தற்போது செயல்பட்டு வரும் கியாவின் ஆலையில் 24,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ள நிலையில், புதிய ஆலை தொடங்கப்பட்ட பிறகு மொத்த வேலைவாய்ப்புகள் 36,000-ஐ தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய முதலீடு, இந்தியாவில் கியாவின் நீண்டகால வளர்ச்சி திட்டத்திற்கு வலுசேர்ப்பதுடன், நாட்டின் மின்சார வாகன உற்பத்தி துறைக்கும் முக்கிய ஊக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |