பிரான்சில் வீடு புகுந்து 8 வயது சிறுமி கடத்தல்: தாயார் மீது சந்தேகம்
பிரான்சில் மூவர் கும்பலால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி தொடர்பில் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் வீடு புகுந்து மூவர் கும்பல் அவரை கடத்திச் சென்றபோது, அவர் தாய்வழி பாட்டியுடன் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.
கிழக்கு பிரான்சில் லெஸ் பவுலியர்ஸ் என்ற பகுதியிலேயே செவ்வாய்க்கிழமை சுமார் 11.30 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
திடீரென்று குடியிருப்புக்குள் புகுந்த அந்த மூவர் கும்பல், 8 வயதேயான மியா மாண்டேமகி என்ற சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் தாயார் லோலா மான்டேமகி (28) தமது கட்டுப்பாட்டில் இருந்து சிறுமி மியாவை விடுவித்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி பாட்டியிடம் சிறுமி மியா ஒப்படைக்கப்பட்டார்.
இதனையடுத்து தமது மகளை தனியாக சந்திக்க லோலாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், மூன்றாவது நபரின் முன்னிலையில் மட்டுமே, சிறுமி மியாவை சந்திக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இந்த நிலையில், சிறுமி மியாவை, அவரது தாயாரே கடத்தி இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமது மகள் முன்னிலையில் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ள லோலாவால், சிறுமி மியாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொலிசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தற்போது பிரான்ஸ் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொலிசார் 8 வயதேயான சிறுமி மியாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.