பணத்திற்காக கடத்தப்பட்ட 13 வயது சிறுவன்... பெற்றோருக்கு கிடைத்த நடுங்கவைக்கும் தகவல்
இந்திய மாகாணம் கர்நாடகாவில் 13 வயது சிறுவன பணத்திற்காக கடத்தப்பட்ட நிலையில், பெற்றோருக்கு நொறுங்கவைக்கும் தகவல் கிடைத்துள்ளது.
காணாமல் போனதாக
பெங்களூருவில் அமைந்துள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் 8 ஆம் வகுப்பு மாணவன் நிஷ்சித் ஏ. புதன்கிழமை மாலை 5 மணிக்கு டியூஷன் வகுப்பில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய மாணவன், அரேகெரே 80 அடி சாலையில் இருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது.
மாணவன் நிஷ்சித்தின் தந்தை ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே பொலிசார் தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
சம்பவத்தன்று டியூஷன் வகுப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற மாணவன் 7.30 மணி வரையில் குடியிருப்புக்கு திரும்பாத நிலையில், டியூஷன் ஆசிரியரைத் தொடர்பு கொண்டதன் பின்னரே பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
வகுப்பு முடித்து உரிய நேரத்தில் மாணவன் வீட்டுக்கு புறப்பட்டதாக டியூஷன் ஆசிரியர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மகனைத் தேடத் தொடங்கிய பெற்றோர், தங்கள் மகனின் மிதிவண்டியை அரேகெரே பூங்காவிற்கு அருகில் கண்டெடுத்தனர்.
தொலைபேசி அழைப்பு
அத்துடன் அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து ரூ.5 லட்சம் கேட்டு அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பும் வந்தது. இதன் அடிப்படையில், ஹுளிமாவு காவல் நிலையத்தில் காணாமல் போனது மற்றும் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பணம் கேட்டு மிரட்டியவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கில் பொலிசார் தேடுதலைத் தொடங்கினர். ஆனால், வியாழக்கிழமை கக்கலிபுரா சாலையில் ஒரு வெறிச்சோடிய பகுதியில் சிறுவனின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |