பிரான்சில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி சுவிஸில் பத்திரமாக மீட்பு
பிரான்சில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி சொந்த தாயாருடன் சுவிட்சர்லாந்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியை கடத்திய குற்றத்திற்காக தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மிக விரைவில் பிரான்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்.
கிழக்கு பிரான்சில் செவ்வாயன்று மூன்று மர்ம நபர்களால் 8 வயதேயான மியா என்ற சிறுமி கடத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாட்டியின் பாதுகாப்பில் இருந்து வந்த சிறுமியே, திடீரென்று கடத்தப்பட்டார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், சம்பவம் நடந்த Vosges பகுதி, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் பெல்ஜியம் எல்லைகளுக்கருகில் அமைந்துள்ளதால், இப்பகுதி பொலிசாரை பிரான்ஸ் அதிகாரிகள் உதவ கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் வாட் மண்டலத்தின் Sainte-Croix பகுதியில் இருந்து பொலிசார் சிறுமி மியாவை மீட்டதுடன் அவரது தாயாரை கைது செய்துள்ளனர்.
சிறுமி மியாவை கடத்தும் பொருட்டு, நால்வர் கும்பலுக்கு 3,000 யூரோ தொகை கூலியாக வழங்கப்பட்டுள்ளது.
சிறுமி மியாவின் தாயார் லோலா தடுப்பூசிக்கு எதிரானவர் எனவும், விசித்திரமான கொள்கைகள் கொண்டவர் எனவும் கூறப்படுகிறது.
மேலும் சிறுமி மியாவை பாடசாலைக்கு அனுப்புவதில் அவருக்கு உடன்பாடில்லை என்றும் கூறப்படுகிறது. மட்டுமின்றி, பிரான்சில் கொரோனா பரவலை எதிர்கொள்ள விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிரான கும்பல் இவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
இதுவரை சிறுமி மியா கடத்தல் விவகாரத்தில் ஐவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைதான ஒருவரிடம் இருந்து வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.