8 வயது சிறுமிக்கு பக்க விளைவுகள் இல்லாத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: பிரித்தானியாவில் முதல் முறை
பிரித்தானியாவில், ஒரு எட்டு வயது சிறுமிக்கு அவரது தாய் சிறுநீரகமும், எலும்பு மஜ்ஜையும் தானம் செய்துள்ளார். ஆச்சரியப்படத்தக்க வண்ணமாக, அவளுக்கு பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை.
விடயம் என்னவென்றால், பிரித்தானியாவில் இப்படி ஒரு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது இது முதல் முறையாகும்.
நோயெதிர்ப்பு சக்தி
நீங்கள் எப்போதாவது, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைக்கு (Kidney Transplant Hospital) சென்றிருப்பீர்களானால், அங்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள் அனைவருமே மாஸ்க் அணிந்திருப்பதைக் காணலாம்.
நம்மில் பலர், இந்த கொரோனா வந்த பிறகுதான் மாஸ்கையே பார்த்தோம். ஆனால், இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளோ நீண்ட காலத்துக்கு மாஸ்குடன்தான் வாழ்ந்தாகவேண்டும்.
காரணம் என்ன தெரியுமா?
அதாவது, மனித உடல் ஒரு ஆச்சரியத்துக்குரிய படைப்பு ஆகும். அதில் ஜீரண மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், நரம்பு மண்டலம், இனப்பெருக்க மண்டலம் என பல மண்டலங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று நோயெதிர்ப்பு சக்தி மண்டலம் ஆகும்.
இந்த நோயெதிர்ப்பு சக்தி மண்டலத்தின் பல வேலைகளில் ஒன்று என்னவென்றால், நம் உடலுக்குள் ஏதாவது நோய்க்கிருமி நுழைந்துவிட்டால், இந்த மண்டலம் அந்த கிருமியை அளிக்க தீவிரமாக செயல்படும். இந்த மண்டலத்தின் சில குறிப்பிட்ட செல்கள், போர் வீரர்களைப் போல, இந்த நோய்க்கிருமிகளுடன் போராடும்.
சிக்கல் என்னவென்றால், இந்த செல்களின் வேலை, உடலுக்குள் நுழையும் அந்நிய பொருள் எதுவாக இருந்தாலும், அது கிருமியாக இருந்தாலும், மற்றொரு செல்லாக இருந்தாலும், இவை அவற்றுடன் போராடும் இல்லையா?
ஆக, ஒருவருக்கு மற்றொருவர் சிறுநீரகம் தான் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். தானம் பெற்ற சிறுநீரகம், வேறொரு உடலில் இருந்து வந்ததுதானே? ஆகவே, சிறுநீரகம் பெற்றவரின் உடல், அந்த சிறுநீரகத்தை தன் உடலுக்குள் நுழைந்த அந்நிய செல் என்று கருதி, அதை எதிர்த்து போராடும்.
அப்படி போராடினால் என்ன ஆகும்? உடல் புதிதாக இணைக்கப்பட்ட சிறுநீரகத்தை ஏற்றுக்கொள்ளாது. ஆகவே, மருத்துவர்கள் என்ன செய்வார்கள் என்றால், அறுவை சிகிச்சை செய்துகொள்ளும், அதாவது, சிறுநீரகம் தானம் பெறும் நபரின் நோயெதிர்ப்பு சக்தியை குறைப்பார்கள். அதற்கென சில மருந்துகள் உள்ளன.
நீண்ட காலம் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நிலை
இந்த சிறுநீரக தானம் பெற்ற நபரின் உடல், புதிதாக பெற்ற சிறுநீரகத்தை ஏற்றுக்கொள்ளும் வரை அவருக்கு இந்த நோயெதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்தும் மருந்து கொடுக்கப்படும். பிரச்சினை என்னவென்றால், ஒரு மருந்து ஒரு நபரின் நோயெதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்துமானால், அது எவ்வளவு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்?
அத்துடன், உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால், எளிதாக அவர்களை நோய்க்கிருமிகளும் தாக்கிவிடும். எனவே, அவர்கள் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும்.
ஆக, ஒரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் இவ்வளவு பிரச்சினைகள் உள்ளன, அறுவை சிகிச்சைக்கும் முன்பும், பின்பும் கூட!
பிரித்தானிய சிறுமிக்கு பக்க விளைவுகள் இல்லாத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
இந்நிலையில், பிரித்தானியாவிலுள்ள, Great Ormond Street Hospital (GOSH) என்னும் மருத்துவமனையின் மருத்துவர்கள், அதிதி ஷங்கர் என்னும் எட்டு வயது சிறுமிக்கு ஒரு புதுவகை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்கள்.
அதிதிக்கு, Schimke's immuno-osseous dysplasia என்னும் அபூர்வ நோய். அந்த நோய், சிறுநீரகங்களையும், நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடிய நோயாகும். பிரித்தானியாவில், மூன்று மில்லியனில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்.
சும்மாவே, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கடினமானது. இதில், அதிதிக்கு ஏற்கனவே நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடிய நோய் உள்ளது. ஆக, அவளது உடல் புதிதாக ஒரு சிறுநீரகத்தை ஏற்றுக்கொள்வது சாத்தியமே இல்லை.
இப்படிப்பட்ட சிக்கலான சூழலில், அந்த மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சைப் பிரிவு, நோயெதிர்ப்பு சக்தி சிகிச்சைப் பிரிவு மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சைப் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் இணைந்து திட்டம் ஒன்றை முன்வைத்தார்கள்.
இரட்டை சிகிச்சை
அதன்படி, அதிதியின் தாயாகிய திவ்யாவின் உடலிலிருந்து எலும்பு மஜ்ஜை (Bone marrow) எடுக்கப்பட்டு, அது முதலில் அதிதியின் உடலில் செலுத்தப்பட்டது. ஆச்சரியப்படத்தக்க வகையில், அதிதியின் உடல், தன் தாயின் எலும்பு மஜ்ஜையை ஏற்றுக்கொண்டது.
அதிதியின் உடல் தன் தாயின் எலும்பு மஜ்ஜையை ஏற்றுக்கொள்ளுமானால், அது அவரது சிறுநீரகத்தையும் ஏற்றுக்கொள்ளுமே என்று கருதிய மருத்துவர்கள், எலும்பு மஜ்ஜை சிகிச்சை முடிந்து ஆறு மாதங்களுக்குப் பின், அதிதிக்கு, அவளது தாயின் சிறுநீரகங்களில் ஒன்றைப் பொருத்தினார்கள்.
அடுத்த ஆச்சரியம், அவளது உடல், அவளது தாயின் சிறுநீரகத்தையும் ஏற்றுக்கொண்டது! என்ன ஆனாலும், அந்த நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளைக் கொடுக்காமல் இந்த சிகிச்சை செய்ய முடியாது. ஆனால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வோர் நீண்ட காலம் அந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும் இல்லையா?
ஆனால், அதிதியின் அறுவை சிகிச்சை முடிந்து, ஒரே மாதத்தில் அவளுக்குக் கொடுக்கப்பட்ட நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளை மருத்துவர்கள் நிறுத்திவிட்டார்கள். மீண்டும் மீண்டும் ஆச்சரியம், அதிதியின் சிறுநீரகம் செவ்வையாக இயங்கத் துவங்கிவிட்டது, அவளது நோயெதிர்ப்பு சக்தி மண்டலமும் சிறப்பாக செயல்படத் துவங்கிவிட்டது. அவளுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
பக்க விளைவுகளை உருவாக்கும் மருந்துகளை அவள் இனி எடுத்துக்கொள்ளத் தெவையும் இல்லை!
ஒரு முக்கிய விடயம், இது எல்லாருக்கும் எளிதாக சாத்தியம் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனென்றால், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிசை செய்துகொள்வோர் கீமோதெரபி, ரேடியோதெரபி என்னும் கடினமான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கும்.
ஆனாலும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வோர் வாழ்நாள் முழுவதும் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை என்பதால், எதிர்காலத்தில் இந்த சிகிச்சையில் மேற்கொள்ளப்படும் முன்னேற்றங்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றான, வாழ்நாள் முழுவதும் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பிரச்சினையை மேற்கொள்ள உதவும் என்பதில் சந்தேகமில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |