சொந்த சகோதரரை கொன்று தற்கொலை செய்து கொண்ட சுவிஸ் இளம் பெண்: கதறும் பெற்றோர்
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாநிலத்தில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட சகோதரர்கள் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ஆர்காவ் மாநிலத்தின் Frick பகுதியில் உள்ள குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை சகோதரர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளின் சடலத்தை முதன் முதலில் கண்டு, தகவல் தெரிவித்துள்ளதாக அரசு சட்டத்தரணிகள் அலுவலகம் சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது முதலே அவர்கள் கடுமையான மனத்துயரத்தில் இருப்பதாகவும், உறவினர்கள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் 26 வயதான பெண்ணே தமது 25 வயதான சகோதரரை கொடூரமாக கத்தியால் தாக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் கத்தி ஒன்றை கண்டெடுக்கப்பட்டதால், தாக்குதலுக்கு கத்தியை பயன்படுத்தி இருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சகோதரர்கள் இருவரும் மோதிக்கொண்டதன் உண்மையான பின்னணி விசாரணையில் இருப்பதாகவும் சட்டத்தரணிகள் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் அவசர உதவிக்குழுவினருக்கு இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த குடியிருப்பின் சுற்றுவட்டார பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியையும் நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.