ஜேர்மனியில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் சாக்லேட்களில் பயங்கர நோய்க்கிருமி
ஜேர்மனி முதலான நாடுகளில், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் சாக்லேட்களில் சால்மோனெல்லா என்னும் பயங்கர நோய்க்கிருமி இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, அந்த சாக்லேட்டுகளைத் தயாரிக்கும் நிறுவனம் அவற்றை திருப்பிக் கொடுக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஈஸ்டர் பண்டிகை நெருங்கும் நேரத்தில், மேலை நாட்டவர்கள் Surprise Eggs என்னும் சாக்லேட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இந்நிலையில், Ferrero என்னும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த இனிப்புகள் தயாரிக்கும் நிறுவனம், தனது தயாரிப்புகளான சில சாக்லேட்டுகளை உண்ணவேண்டாம் என்றும், அவற்றைத் திருப்பிக் கொடுக்குமாறும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி இருப்பது தெரியவந்துள்ளதால், அவற்றைப் பயன்படுத்தவேண்டாம் என Ferrero நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த சாக்லேட்டுகள் ஜேர்மனி மட்டுமல்லாது பெல்ஜியம், பிரான்ஸ்,ஸ்வீடன் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
சொல்லப்போனால், பிரித்தானியாவில் ஏற்கனவே சால்மோனெல்லா தொற்று பரவி, ஐந்து வயதுக்குட்பட்ட சிறு பிள்ளைகள் முதல், 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஜேர்மனியைப் பொருத்தவரை, 2022 ஏப்ரல் முதல் ஜூன் வரை பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள Kinder Surprise Eggs என்னும் சாக்லேட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன.
அத்துடன், 2022 மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள Kinder Choco-Bons மற்றும் Kinder Choco-Bons White, 2022 ஆகத்து மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள Kinder Surprise Maxi (100 grams), Kinder Mini Eggs (100 grams) மற்றும் மேற்கூறப்பட்ட சாக்லேட்டுகளைக் கொண்ட Children's Mix packs ஆகியவையும் திரும்பப் பெறப்படுகின்றன.
சால்மோனெல்லா கிருமி உணவு மூலம் பரவி வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்பிடிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.