போப்பை சந்திக்கும் பயணத்தை திடீரென ரத்து செய்த மன்னர் சார்லஸ்
போப் பிரான்சிஸை சந்திக்க வத்திக்கானுக்கு மன்னர் மற்றும் ராணியின் அரசுமுறை பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
மன்னர் மற்றும் ராணியார் தம்பதி எதிர்வரும் ஏப்ரல் 7ம் திகதி முதல் இத்தாலிக்குச் சென்று, போப்பாண்டவரைச் சந்திக்க திட்டமிட்டிருந்தர். போப் பிரான்சிஸ் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் தற்போது பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் அந்த சந்திப்பானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் நிமோனியா பாதிப்பிலிருந்து பிரான்சிஸ் தொடர்ந்து மீள்வதற்கான வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில், மன்னர் மற்றும் ராணியின் போப்பாண்டவரைச் சந்திக்கும் முடிவானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ ஆலோசனையின்படி, போப் பிரான்சிஸ் நீண்ட கால ஓய்வு தேவைப்படும் நிலையில் உள்ளார். அவர் பூரணமாக குணமடைந்ததன் பின்னர் சந்திப்பு முன்னெடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இத்தாலி பயணம் சில மாறுதல்களுடன் முன்னெடுக்கப்படும் என்றே கூறப்படுகிறது. சுமார் ஐந்து வாரங்கள் மருத்துவமனை சிகிச்சையை முடித்துக் கொண்டு ஞாயிறன்று போப் பிரான்சிஸ் வீடு திரும்பியுள்ளார்.
20வது திருமண நாளினை
ஆனால் 2 மாதம் ஓய்வு கட்டாயம் என்றும், பெரிய கூட்டங்களில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சிகிச்சை முடித்து வெளியேறும் முன்பு ஜெமெல்லி மருத்துவமனைக்கு வெளியே கூட்டத்தை வரவேற்றபோது, அவர் பலவீனமாகவே காணப்பட்டார்.
இதனிடையே, மன்னரும் ராணியாரும் தங்களின் 20வது திருமண நாளினை ஏப்ரல் 9ம் திகதி இத்தாலியில் வைத்து கொண்டாட உள்ளனர். இந்தப் பயணத்தின் போது, மன்னர் இத்தாலிய ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா மற்றும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோருடன் சந்திப்புகளை நடத்துவார்.
ஜனாதிபதி முன்னெடுக்கும் விருந்திலும் மன்னர் கலந்துகொள்ள இருக்கிறார். போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் மன்னரின் அரசு முறை பயணம் அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து திருச்சபையின் உச்ச ஆளுநரான சார்லஸ், கடைசியாக 2019 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசராக இருந்தபோது போப்பை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |