சார்லஸ் மன்னரின் அறக்கட்டளை ஆலோசனை சபையில் புதிதாக இணைந்த இரு இந்திய கோடீஸ்வரர்கள்
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் நிறுவிய அறக்கட்டளை ஒன்றின் ஆலோசனை சபையில் புதிதாக இரு இந்திய கோடீஸ்வரர்களை இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய மக்களுக்கு என அறக்கட்டளை
கடந்த 2007ல் அப்போதைய வேல்ஸ் இளவரசரான சார்லஸ் ஆசிய மக்களுக்கு என அறக்கட்டளை ஒன்றை நிறுவினார். இந்த தொண்டு நிறுவனமூடாக தெற்காசிய மக்கள் மில்லியன் கணக்கானோர் பலனடைந்துள்ளதாகவே கூறப்படுகிறது.
தற்போது அந்த தொண்டு நிறுவனத்தின் ஆலோசனை சபையில் இந்திய தொழிலதிபர்களான நிகில் காமத் மற்றும் நீரஜா பிர்லா ஆகியோர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.
Zerodha என்ற முதலீட்டு நிறுவனத்தை நிறுவியவர் நிகில் காமத். மேலும், மொத்த சொத்தில் சரிபாதியேனும் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க உறுதி அளித்துள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளவர் நிகில் காமத்.
சார்லஸ் மன்னரின் தொண்டு நிறுவன ஆலோசனை சபையில் இணைத்துக் கொள்ளப்பட்டது பெருமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆதித்ய பிர்லா கல்வி அறக்கட்டளையின் தலைவராக செயல்பட்டு வருபவர் நீரஜா பிர்லா.
தலைவராக முகேஷ் அம்பானி
பிரித்தானிய ஆசிய அறக்கட்டளை உலகெங்கிலும் பாராட்டத்தக்க பணிகளைச் செய்து வருகிறது என குறிப்பிட்டுள்ள அவர், பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளையின் இந்திய ஆலோசனைக் குழுவில் இணைந்து, இந்தியா முழுவதும் உளநலம் தொடர்பான எங்கள் பணியை விரிவுபடுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் நீரஜா பிர்லா தெரிவித்துள்ளார்.
சார்லஸ் மன்னர் நிறுவிய பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளையின் இந்திய ஆலோசனைக் குழுவின் தலைவராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான முகேஷ் அம்பானி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |