எளிமையாக முடிசூட்டு விழா... அரண்மனையில் சொகுசு வாழ்க்கை இல்லை: சார்லஸ் மன்னர் அதிரடி முடிவு
முடிசூட்டு விழாவானது எந்த ஆடம்பரமும் இன்றி, மிக எளிமையாக, குறைவான நேரத்தில்
அரச குடும்பத்து உறுப்பினர்களை அதிகமாக பொதுமக்கள் சந்திக்கும் நிலையும் ஏற்படாது
பிரித்தானியாவின் புதிய மன்னராக முடிசூடவிருக்கும் சார்லஸ் இளவரசர், 7 உறுப்பினர்கள் கொண்ட அரச குடும்பத்தினருடன் செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளார்.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8ம் திகதி ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் காலமானார். அவருக்கு வயது 96. இந்த நிலையில், அவரது மகன் சார்லஸ் நாட்டின் புதிய மன்னராக முடிசூடவிருக்கிறார்.
@getty
இதன்பொருட்டு, இதுவரை செயல்பட்டு வந்துள்ள அனைத்து பதவிகளும் பொறுப்புகளும் மறுசீரமைப்பு செய்யவிருக்கிறார்கள். ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள அரச குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க சார்லஸ் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்துள்ளார்,
மேலும் பக்கிங்ஹாம் அரண்மனையை பொதுமக்களின் பார்வைக்காக திறக்கலாம் என்ற முடிவுக்கும் அவர் வந்திருந்தார். மன்னராக முடிசூடவிருக்கும் சார்லஸ் பக்கிங்ஹாம் அரண்மனையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக இல்லை என தமது நெருங்கிய வட்டாரத்திடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
@reuters
மேலும், புதிய உத்தியோகப்பூர்வ லண்டன் மாளிகைக்கு அவர் குடிபெயர்வார் எனவும், அங்கே மட்டுமே இனி குடியிருப்பார் எனவும் கூறப்படுகிறது. குறித்த லண்டன் மாளிகையானது பொதுவான அடுக்குமாடி குடியிருப்பு போன்ற ஒரு இல்லம் என்றே கூறுகின்றனர்.
மேலும், ஹைக்ரோவில் உள்ள அவரது நிரந்தர வீடு இனிமுதல் குடும்ப வீடாக கருதப்படும். அத்துடன், புதிய பட்டம் பெற்றிருக்கும் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி விண்ட்சர் கோட்டைக்கு மிக மிக அருகாமையில் குடியிருக்க உள்ளனர்.
@getty
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவானது எந்த ஆடம்பரமும் இன்றி, மிக எளிமையாக, குறைவான நேரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது விலைவாசி உயர்வு மற்றும் நிதி நெருக்கடிக்கு மத்தியில், மன்னர் சார்லஸின் இந்த முடிவு கண்டிப்பாக பொதுமக்களால் ஆதரிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
மேலும், இனி அரச குடும்பத்து உறுப்பினர்களை அதிகமாக பொதுமக்கள் சந்திக்கும் நிலையும் ஏற்படாது என்றே கூறப்படுகிறது. இனிமுதல் மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமிலா, வில்லியம், அவரது மனைவி கேட் மற்றும் இளவரசி ஆன் இவர்களுடன் இளவரசர் எட்வார்ட் மற்றும் இவரது மனைவி சோஃபி ஆகியோரே செயற்படும் அரச குடும்ப உறுப்பினர்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
@reuters
மேலும், பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் பால்மோரல் மாளிகை ஆகியவையை ப்துமக்கள் பார்வைக்கு திறக்கும் முடிவு முன்னர் ராணியாரால் மறுக்கப்பட்டது, தற்போது அந்த திட்டம் அமுலுக்கு வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.