ஆங் சாங் சூ கி விடயத்தில் மன்னர் சார்லஸ் எடுத்த நடவடிக்கை
Myanmar releases rare images of Aung San Suu Kyi after King Charles’s dramatic intervention: மன்னர் சார்லசின் அசாதாரண தலையீட்டைத் தொடர்ந்து, மியான்மர் அரசு ஆங் சாங் சூ கியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
மியான்மரின் முன்னாள் தலைவரான ஆங் சாங் சூ கியின் நிலை குறித்து பல ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமலிருந்த நிலையில், மன்னர் சார்லசின் தலையீட்டைத் தொடர்ந்து, மியான்மர் அரசு ஆங் சாங் சூ கியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
நீடித்து வந்த மர்மம்
2021ஆம் ஆண்டு மியான்மரில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து மியான்மர் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஆங் சாங் சூ கி (81).

ஐந்து ஆண்டுகளாக அவர் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது கூட யாருக்கும் தெரியாத நிலையில், அவரது உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துவந்தார்கள்.
பின்னர், மே மாதம், அவர் சிறைச்சாலையிலிருந்து வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. ஆனாலும், அவரை யாரும் பார்த்ததாக தகவல் இல்லை.
மன்னர் சார்லஸ் எடுத்த நடவடிக்கை
இந்நிலையில், ஆங் சாங் சூ கி விடயத்தில் பிரித்தானிய மன்னர் சார்லஸ் தலையிட்டுள்ளார்.
தூதரக வாயிலாக அவர் மேற்கொண்ட அணுகலைத் தொடர்ந்து, மீண்டும் ஆங் சாங் சூ கியின் சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை திங்கட்கிழமையன்று வெளியிட்டுள்ளது மியான்மர் அரசு.

ஆங் சாங் சூ கிக்கு மன்னர் சார்லஸ் எழுதிய கடிதம் ஒன்றும், அவர் பரிசாக அளித்த சுற்றுச்சூழல் குறித்த இரண்டு புத்தகங்களும் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட புகைப்படங்களில் ஒன்றில், ஆங் சாங் சூ கி பாரம்பரிய உடையில் ஒரு மேசை முன் அமர்ந்திருப்பதையும், அவருடன் அரசு அலுவலர்கள் இருவர் அமர்ந்திருப்பதையும் காணலாம்.
ஆங் சாங் சூ கியை தொடர்பு கொண்ட மன்னர் சார்லசின் இந்த அசாதாரண நடவடிக்கை ஒரு அரிய நிகழ்வு என்பதால், அது பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.