மறைந்த ராணியாரின் முடிவுக்கு எதிராக... இளவரசர் ஹரிக்கு புதிய பதவி வழங்கும் மன்னர் சார்லஸ்
தற்போது செயல்படும் உறுப்பினர்கள் வரிசையில் இல்லாத ஹரி மற்றும் ஆண்ட்ரூ ஆகியோரின் பதவிகளை பறிப்பார்
ராணியார் கமிலா, இளவரசர் வில்லியம், ஹரி, ஆண்ட்ரூ மற்றும் இளவரசி பீட்ரைஸ் ஆகியோர் இடம்பெறுவார்கள்
பிரித்தானிய ராஜகுடும்பத்தில் செயல்படும் உறுப்பினர்கள் வரிசையில் இல்லாத, இளவரசர் ஹரி மற்றும் ஆண்ட்ரூவுக்கு முக்கிய பொறுப்பு வழங்க மன்னர் சார்லஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னர் சார்லஸ் முதன்முறையாக தமது ஆலோசகர்கள் குழுவில் 5க்கும் மேற்பட்டவர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆலோசகர்கள் குழுவினரே, மன்னர் நாட்டில் இல்லாத போதும் அல்லது நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும் அரச கடமைகளை முன்னெடுப்பார்கள்.
@getty
ராணியார் காலமாகும் வரையில், அவருக்கான ஆலோசகர்கள் வட்டத்தில் இளவரசர் சார்லஸ், வில்லியம், ஆண்ட்ரூ மற்றும் ஹரி ஆகியோர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். 2017ல் ஓய்வை அறிவிக்கும் வரையில் ராணியாரின் கணவர் இளவரசர் பிலிப்பும் குறித்த ஆலோசகர்கள் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
ராணியார் மறைவுக்கு பின்னர் மன்னராக சார்லஸ் பொறுப்புக்கு வந்ததும், தற்போது செயல்படும் உறுப்பினர்கள் வரிசையில் இல்லாத ஹரி மற்றும் ஆண்ட்ரூ ஆகியோரின் பதவிகளை பறிப்பார் என்றே பரவலாக கூறப்பட்டு வந்தது.
@getty
ஆனால் புதிய திருப்பமாக, தமது மகன் மற்றும் சகோதரரை இனி மேலும் தண்டிக்க வேண்டாம் என மன்னர் சார்லஸ் முடிவு செய்துள்ளதாகவும், அதன்படி, ஆலோசகர்கள் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை 8 என அதிகரித்து, அதில் ராணியார் கமிலா, இளவரசர் வில்லியம், ஹரி, ஆண்ட்ரூ மற்றும் இளவரசி பீட்ரைஸ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது.
1937 மற்றும் 1953 இன் ரீஜென்சி சட்டங்களின் விதிமுறைகளின் கீழ், இந்த நியமனம் செல்லும் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இளவரசி ஆன், இளவரசர் எட்வார்ட் மற்றும் வேல்ஸ் இளவரசி கேட் ஆகியோரும் இந்த புதிய பொறுப்புக்கு கொண்டுவர வாய்ப்புள்ளது.
@getty
மன்னர் மற்றும் ராணியார் ஆகிய இருவரும் நாட்டுக்கு வெளியே இருக்கும் போது, அரச கடமைகளை வேல்ஸ் இளவரசர் வில்லியம் தம்பதி மட்டுமே நிறைவேற்ற வேண்டும் எனவும் சட்டம் உள்ளது.
மன்னர் சார்லஸ் உலகளாவிய சுற்றுப்பயணத்திற்கு திட்டமிட்டுவரும் நிலையில், ஆலோசகர்கள் வட்டத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார் என்றே தெரியவந்துள்ளது.