சார்லஸ் மன்னரின் அமெரிக்கப் பயணம்... பக்கிங்ஹாம் அரண்மனை அளித்த விளக்கம்
மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் நான்கு நாள் அமெரிக்கப் பயணம் திட்டமிட்டபடியே நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
மன்னரின் பயணம்
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்ட இரவு விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை தற்போது மன்னரின் பயணத்தை உறுதி செய்துள்ளது.

அட்லாண்டிக்கின் இருபுறமும் நாள் முழுவதும் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில், சார்லஸ் மன்னர் மற்றும் ராணி அவர்களின் அரசுமுறைப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் என அரண்மனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி உட்பட முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்ட விழாவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததை அடுத்து 31 வயதான ஆயுததாரி கோல் தாமஸ் ஆலன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சனிக்கிழமை இரவு வாஷிங்டன் ஹில்டன் ஹொட்டலின் விருந்தினர் அரங்கில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் 2,000-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
மனைவி மெலானியாவுடன் கலந்துகொண்ட டிரம்ப், 2026-ஆம் ஆண்டு நிகழ்வில் சிறப்புரை ஆற்றுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் அந்த பிரம்மாண்ட விழாவில் அவர் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.

துப்பாக்கிச் சத்தம்
ஆனால், அமெரிக்க ஜனாதிபதி தனது உரையைத் தொடங்குவதற்கு முன்பே, அந்த விருந்தினர் அரங்கம் முழுவதும் துப்பாக்கிச் சூட்டின் பயங்கரமான சத்தம் எதிரொலித்தது.
ஆலன் தனது கலிபோர்னியா வீட்டிலிருந்து ரயிலில் பயணம் செய்து, சிகாகோவில் ரயில் மாறி, பின்னர் வாஷிங்டனில் உள்ள அந்த ஆடம்பரமான ஹோட்டலுக்குச் சென்றதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

இரவு சுமார் 8.35 மணியளவில் திடீரெனக் கேட்ட துப்பாக்கிச் சத்தத்தால் விருந்து தடைபட்டது. துணை ஜனாதிபதி வேன்ஸ் தான் முதலில் மேடையிலிருந்து வெளியேற்றப்பட்டு, அதிகாரிகளால் சூழப்பட்ட ஒரு பின்புற அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதன் பின்னரே, ஜனாதிபதி ட்ரம்பும் அவரது மனைவி மெலானியாவும் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், வாஷிங்டன் ஹில்டன் ஹொட்டலுக்குள் இருந்த பாதுகாப்புச் சோதனைச் சாவடியைக் கடந்து ஓடி, அதிகாரிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடத்தியதாகக் காவல்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆலன் கைது செய்யப்பட்டார்.
ஆலன் ஃபெடரல் அளவிலான துப்பாக்கி மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார் என்றும், திங்களன்று குற்றச்சாட்டு விசாரணைக்காக ஃபெடரல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |