புற்றுநோய் சிகிச்சைக்கிடையே பணிக்கு திரும்பிய மன்னர்: முதன்முறையாக மன்னரின் குரலுடன் வீடியோ
மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், பிரதமரை சந்திப்பது முதலான பணிகளை நிறுத்தப்போவதில்லை என்று கூறியிருந்தார் மன்னர்.
இந்நிலையில், மன்னர் கூறியதுபோலவே, நேற்று அவர் பிரதமர் ரிஷியை சந்திக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Credit: PA
முதன்முறையாக மன்னரின் குரலுடன் வீடியோ...
பொதுவாக, மன்னரோ அல்லது மகாராணியோ, தன் விருந்தினர்களை சந்திக்கும் காட்சிகள் வெளியாகும். ஆனால், அவர்கள் பேசிக்கொள்ளும் விடயங்கள் வெளியாகாது. அதாவது, ஆடியோ இல்லாத வீடியோ மட்டுமே வெளியாகும்.
இந்நிலையில், முதன்முறையாக மன்னரும் பிரதமர் ரிஷியும் சந்திக்கும் காட்சிகள் ஆடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளன. வெளியாகியுள்ள வீடியோவில் மன்னரில் குரலைக் கேட்கலாம்.
அத்துடன், ராஜ குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டால், கூடுமானவரை அவர்களுக்கு என்ன நோய் என்பது ரகசியமாகவே வைக்கப்படும்.
ஆனால், மன்னர் சார்லசோ, தனக்கு புற்றுநோய் என்பதை மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளதுடன், மக்கள் புற்றுநோய் முதலான உடல் நல பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நெகிழவைத்த மக்கள்
மன்னரும் பிரதமர் ரிஷியும் சந்திக்கும்போது, தனது உடல் நலம் பாதிக்கப்பட்டதை அறிந்து, தான் நலம் பெறவேண்டும் என விரும்பி, அதற்காக ஏராளமனோர் வாழ்த்துச் செய்திகளும், வாழ்த்து அட்டைகளும் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்த மன்னர், தான் வாழ்த்துச் செய்திகளைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனதாக தெரிவித்துள்ளார்.
அவற்றைப் படிக்கும்போதெல்லாம் தன் கண்களில் நீர் துளிர்த்ததாகவும் தெரிவித்துள்ளார் மன்னர்.
Credit: PA
மன்னரை சந்தித்ததில் தனக்கு பெருமகிழ்ச்சி என்று கூறிய பிரதமர் ரிஷி, நாங்களெல்லாரும் உங்கள் பின்னால் நிற்கிறோம், நாடே உங்கள் பின்னால் நிற்கிறது என்றார்.
தொடர்ந்து புற்றுநோய் தொடர்பான தொண்டு நிறுவனங்கள் ஆற்றி வரும் அரிய பணி முதலான பல்வேறு விடயங்கள் குறித்து பேசிக்கொண்ட நிலையில், இருவரும், தங்கள் அதிகாரப்பூர்வ பணியைத் தொடர்ந்தார்கள்.
மன்னருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டபின் அவர் பிரதமரை சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும். பிரித்தானிய மக்களுக்கும், மன்னரின் ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் இந்த வீடியோ மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |