மிரட்டலான பதிலடி! நூலிழையில் தோல்வியை தழுவிய ராஜஸ்தான்: சஞ்சு சாம்சன் அபார சதம்
பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் அற்புதமாக சதம் அடித்தும் அந்தணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
அதன் படி முதலில் ஆடிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரரான கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். அகர்வால் 14 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்தபடியாக அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் களமிறங்கினார்.
இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிறிஸ் கெய்ல் 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த தீபக் ஹூடா அதிரடியாக விளையாட, கே.எல்.ராகுல் ஒரு புறம் 30 பந்தில் அரைசதம் அடிக்க பஞ்சாப் அணியின் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் எகிறியது.
அதிரடியாக விளையாடிய தீபக் ஹூடா 20 பந்தில் 1 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 17.3 ஓவரில் 194 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, தீபக் ஹூடா 28 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 105 ஓட்டங்கள் குவித்தது.
அடுத்து வந்த பூரன் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்கள் குவித்தது. 222 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக பென் ஸ்டோக்சும், மனன் வோராவும் களமிறங்கினர்.
முதல் ஓவரின் 3வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இவரைத் தொடர்ந்து மனன் வோரா 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும், அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் ஆடினார். ஜோஸ் பட்லர், ஷிவம் டூபே ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
இதில் பட்லர் 25 ஓட்டங்களிலும், ஷிவம் டூபே 23 ஓட்டங்களிலும், ரியான் பராக் 11 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 25 ஓட்டங்களிலும் அவுட்டாக, ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் தனியாளாக போராடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முயன்றார்.
இருப்பினும் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்கள் எடுத்து, 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திதது.
அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 119 ஓட்டங்களில் கடைசி பந்தில் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.