நான் சோகமாக இல்லை, ஆனால்.. வேதனையுடன் பேசிய கொல்கத்தா கேப்டன்
பிளேயிங் 11யில் அதிகப்படியான மாற்றங்களை செய்தது தான் தோல்விகளுக்கு காரணம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
லக்னோ அணியுடனான தோல்வியினால் பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் போட்டி முடித்ததும் பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறும்போது ,
'எனக்கு வருத்தமே இல்லை. நான் விளையாடிய கிரிக்கெட்டின் சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. எங்கள் குணாதிசயமும், அணுகுமுறையும் மிகச் சிறப்பாக இருந்தது. கடைசி வரை ரிங்கு போராடிய விதம் எனக்கு பிடித்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டு பந்துகள் எஞ்சியிருந்தபோது வெற்றியை பெற முடியாமல் போனதால் அவர் மிகவும் சோகமாக இருந்தார்.
அவர் எங்களுக்காக ஆட்டத்தை முடித்து, ஹீரோவாக மாறுவார் என்று நான் நம்பினேன், எனினும் அவர் ஒரு அற்புதமான ஆட்டத்தை விளையாடினார். நான் அவரை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாங்கள் உள்ளே வந்தபோது, பிட்ச் உலர்ந்ததாகவும், புல் ஈரமாக இல்லாததாலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவி இருக்கும் என்று நினைத்தேன்.
இந்த சீசன் எங்களுக்கு நிலையற்றதாக இருந்தது. நாங்கள் முதலில் சிறப்பாகத் தொடங்கினோம், ஆனால் தொடர்ச்சியாக ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்தோம். இதற்கு காரணம் ப்ளேயிங் 11ல் அதிகப்படியான மாற்றங்கள் செய்தது தான் என நினைக்கிறேன். வீரர்களின் ஃபிட்னஸ் மற்றும் காயங்கள் அதற்கு வழிவகுத்துவிட்டது' என தெரிவித்துள்ளார்.