ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி செய்த தவறு - உண்மையை ஒப்புக்கொண்ட மெக்கல்லம்
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தாங்கள் செய்த தவறு குறித்து கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிசிசிஐயால் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் நடப்பாண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைவதோடு வீரர்களுக்கான மெகா ஏலமும் நடக்கவுள்ளது. இதனால் இந்த தொடர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய 2 நாட்கள் பெங்களூரு மாநகரில் நடைபெற உள்ள இந்த மெகா ஏலத்தில் 1214 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அதற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் விரும்பிய வீரர்களை தக்க வைத்துள்ள விபரத்தையும் வெளியிட்டன. அந்த வகையில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா அணி வெஸ்ட்இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸல் (12 கோடி), தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி (8 கோடி), இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் (8 கோடி), வெஸ்ட்இண்டீஸ் வீரர் சுனில் நரேன் (6 கோடிகள்) ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது.
ஆனால் அந்த அணிக்காக விளையாடி வந்த நம்பிக்கை நட்சத்திர இளம் வீரர் சுப்மன் கில் தக்க வைக்கபடாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சுப்மன் கில்லை தக்கவைக்காமல் தவறவிட்டு விட்டோம் என கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
மெகா ஏலத்தில் நிறைய வீரர்களை இழக்க நேரிடும் என்பதால் திட்டமிட வேண்டியிருந்தது. இருப்பினும் ஏலத்தில் சுப்மன் கில்லை இழந்தது மிகப்பெரிய ஏமாற்றமாகும் எனவும் அவர் கூறியுள்ளார். கொல்கத்தா அணிக்காக 58 போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 1214 ரன்கள் குவித்துள்ளார். தற்போது இவரை புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அகமதாபாத் கிரிக்கெட் அணி 8 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.