சகலதுறை வீரராக மிரட்டிய சுனில் நரைன்... ஒற்றை ஆளாக டெல்லிக்கு செய்த சம்பவம்
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுள்ளது.
சிறப்பாக ஆடிய டூ பிளசிஸ்
டெல்லி அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுனில் நரைனின் பந்துவீச்சு மற்றும் அணித்தலைமை என ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக கொல்கத்தா அணி பக்கம் திருப்பியது.
முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் டூ பிளசிஸ் - அபிஷேக் போரெல் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது.
கொல்கத்தா அணியின் அனுகுல் ராய் முதல் ஓவரை வீசினார். அவர் வீசிய 2வது பந்திலேயே அபிஷேக் போரெல் 4 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து கருண் நாயர் களமிறக்கப்பட்டார். டூ பிளசிஸ் - கருண் நாயர் கூட்டணி அதிரடியாக ஓட்டங்கள் குவிக்க, டெல்லி அணியின் கைகள் ஓங்கியது.
ஆனால் 5வது ஓவரில் கருண் நாயர் 15 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கேஎல் ராகுல் 7 ஓட்டங்களில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால் டெல்லி அணி 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் டூ பிளசிஸ் - அக்சர் படேல் ஜோடி இணைந்து அதிரடியாக விளையாடத் தொடங்கியது.
வருண் சக்கரவர்த்தி வீசிய 9வது ஓவரில் மட்டும் 4, 4, 6 என்று 16 ஓட்டங்கள் விளாசப்பட்டது. இதனால் 10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணியின் ஸ்கோர் 97 ஓட்டங்களாக உயர்ந்தது.
இதனிடையே சிறப்பாக ஆடிய டூ பிளசிஸ் 31 பந்துகளில் அரைசதம் கடக்க, அக்சர் படேல் சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி தள்ளினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த அவர், சுனில் நரைன் பந்தில் 23 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
அபார வெற்றி
இதன்பின் வந்த ஸ்டப்ஸ் 1 ரன்னிலும், டூ பிளசிஸ் 62 ஓட்டங்களிலும், அஷுதோஷ் சர்மா 7 ஓட்டங்களிலும், மிட்சல் ஸ்டார்க் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனால் டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 38 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
ஹர்சித் ராணா வீசிய 19வது ஓவரில் 13 ஓட்டங்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரில் 25 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீச ரஸ்ஸல் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் அதிரடியாக ஆடிய விப்ராஜ் நிகம் 19 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, கொல்கத்தா அணியின் வெற்றி உறுதியானது.
இறுதியாக டெல்லி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ஓட்டங்கள் எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனால் கொல்கத்தா அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, அணித்தலைவராகவும் அசத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |