ஒருத்தன நீங்க சீண்டினாலும் நாங்க 11 பேர் வருவோம்! இங்கிலாந்தை எச்சரித்த கே.எல்.ராகுல்
இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல்.ராகுல் இங்கிலாந்து அணி மற்றும் பிற அணிகளுக்கு எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே லார்ட்சில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 152 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிக் கொண்டிருந்த போது, இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான பும்ரா-ஷமி ஜோடி 9-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து சிறப்பான பார்டனர்ஷிப் அமைத்து கொடுத்தனர்.
இந்த ஜோடி 9-வது விக்கெட்டிற்கு 89 ஓட்டங்கள் சேர்த்ததன் மூலம், இந்திய அணி ஒரு வலுவான இலக்கை இங்கிலாந்திற்கு நிர்ணயிக்க முடிந்தது.
இந்நிலையில் இந்த ஜோடி பேட்டிங் செய்யும் போது இங்கிலாந்து வீரர்கள் மார்க் வுட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் பும்ராவிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
இதனால் போட்டி பரபரப்பானது. இந்த சம்பவத்திற்கு பிறகுதான் பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர்.
இதையடுத்து போட்டி முடிவுக்கு பின் இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல்.ராகுல் கூறுகையில், இரு பலமான அணிகள் மோதும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம் தான்.
எங்களுக்கும் போட்டியின் போது இதுபோன்று சற்று வார்த்தைப் போரில் ஈடுபடுவது பிடிக்கும். ஆனால் எங்களின் அணியில் ஒருவரை நீங்கள் தாக்கினாலோ, பேசினாலோ நாங்கள் 11 பேரும் அவருக்கு பக்கபலமாக நின்று பதிலடி கொடுப்போம்.
எங்களது பந்துவீச்சின் போதும் நாங்கள் உத்வேகத்துடனும், ஆக்ரோஷத்துடனும் இருந்தோம். இதுவே நாங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.