கொழுப்பை சாப்பிடுங்க.. ஆரோக்கியமாக வாழலாம்! ஏன் தெரியுமா?
கொழுப்பு என்றவுடனே அது கெட்ட பொருள் என்றே நாம் நினைக்கின்றோம், ஆனால் நம் உடலுக்கு நன்மை அளிக்கும் அத்தியாவசிய கொழுப்புகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
நமது குடலில் 'வைட்டமின் பி' உருவாவதற்கும், தோல் பாதுகாப்புக்கும், இனப்பெருக்க ஹார்மோன்களின் உற்பத்திக்கும் கொழுப்பு தேவையான ஒன்று.
மேலும் மூளையின் நினைவாற்றலுக்கும், நரம்புகள் உருவாவதற்கும் கொழுப்பு அவசியம்.
கொழுப்பு குறைந்தால் உடல் வளர்ச்சிக் குறைவு, மலட்டுத்தன்மை, சரும நோய்கள், மாதவிலக்குப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
எந்த கொழுப்பு உங்களுக்கு நல்லது?
இதய நோய், பக்கவாதம் போன்ற நோய்களில் அபாயத்தை குறைக்கும் கொழுப்புகள் ஆலிவ் எண்ணெய், கொட்டை வகைகள், விதைகள் மற்றும் மீன் ஆகியவற்றில் நிறைந்துள்ளது.
பருப்பு அல்லது கொட்டை வகைகளில், குறுகிய தொடர் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உட்பட நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.
இதேபோன்று சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி வகை மீன்கள் ஆரோக்கியமான நீண்ட தொடர் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
கொழுப்பின் வகைகள்
கொழுப்பில் கொலஸ்டிரால், டிரைகிளிசரைடு, கொழுப்புப்புரதம், கொழுப்பு அமிலம் என்று பல வகைகள் உள்ளன.
இவற்றில் 'கொலஸ்டிரால்' என்பது மாமிச உணவில் இருந்து நேரடியாக கிடைக்கிறது. தாவர உணவில் கொலஸ்டிரால் நேரடியாக இல்லை. இது உடலிலும் தயாரிக்கப்படுகிறது.
முக்கியமாக தேவைக்கு அதிகமாக மாவுச்சத்து உடலில் சேரும்போது, கல்லீரல் அதை கொலஸ்டிராலாக மாற்றிவிடும்.
அதனால்தான் அரிசி சாப்பாட்டை அளவோடு சாப்பிட வேண்டும் என்று சொல்கிறோம். நமக்கு இருக்க வேண்டிய கொலஸ்டிராலின் அதிகபட்ச அளவு 180 மி.கி., / டெசி லிட்டர்.