நீதிபதி மகன் ஏற்படுத்திய விபத்து: பலியானவரின் மகள் எடுத்துள்ள முடிவு
Kochi Mercedes crash, Daughter gives up career plans to run father’s dosa chai stall: கேரளாவில் நீதிபதி ஒருவரின் மகன் ஏற்படுத்திய விபத்தில் பலியானவரின் மகள், தந்தையின் உணவகத்தை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளார்.
கேரளாவில், நீதிபதி ஒருவருடைய மகன் ஏற்படுத்திய விபத்து உயிர் பலி வாங்கிய விடயத்தில், பலியானவரின் மகள் வித்தியாசமான ஒரு முடிவை எடுத்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய நீதிபதியின் மகன்
கடந்த மாதம் 25ஆம் திகதி, கேரளாவிலுள்ள சேரநல்லூர் என்னுமிடத்தில், தன் உணவகத்தை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் ஜெய பாலகிருஷ்ணன் (55) என்பவர்.

அப்போது, மணிக்கு 104 கிலோமீற்றர் வேகத்தில் வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது பின்னாலிருந்து மோத, தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மகள் எடுத்துள்ள முடிவு
இந்நிலையில், பாலகிருஷ்ணனின் மகளான பத்ரா கீர்த்தி (24), தன் தந்தையின் உணவகத்தை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளார்.
ஹைதராபாதில் உணவு தர ஆய்வாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார் கீர்த்தி. அவருக்கு சொந்த ஊரில் உணவகம் துவங்கும் திட்டம் எல்லாம் சுத்தமாகக் கிடையாது.

ஆனால், தன் தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உணவகத்தை தொடர்ந்து நடத்துவது என முடிவு செய்துள்ளார் கீர்த்தி.
நேற்று முன் தினம், மீண்டும் தன் தந்தையின் உணவகத்தைத் திறந்த கீர்த்தி, தன் தந்தை நின்ற இடத்தில் நின்று தோசை தயாரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அப்பா 26 ஆண்டுகளாக இந்த உணவகத்தை நடத்திவந்தார் என்று கூறும் கீர்த்தி, அந்தக் கடையுடனான தனது நினைவுகளை நினைவுகூர்ந்து, அதை அப்படியே மூடிவிட முடியாது என்கிறார்.

அத்துடன், தனது ஒரு வருமானம் வீட்டுச் செலவுகளுக்கு போதுமானதாக இல்லை என்றும் கூறுகிறார் கீர்த்தி.
அது மட்டுமல்ல, தன் தந்தையின் மரணத்துக்கு நீதி கிடைக்க, வலிமையான தனது எதிரணியினரை நீதிமன்றத்தில் எதிர்த்து நிற்க, வழக்குச் செலவுகளுக்கும் பணம் வேண்டும்.
பாலகிருஷ்ணனின் உயிரை பலிவாங்கிய காரை ஓட்டியவர், நீதிபதி ஒருவரின் மகன். அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை அவசர அவசரமாக ஜாமீன் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்து உச்சநீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே வழி என முடிவு செய்துள்ளது பாலகிருஷ்ணனின் குடும்பம்.