நான் இதை செய்ததில் எந்த தப்பும் இல்லை! தெரியாம பேசாதீங்க... கோலி கொடுத்த தெளிவான விளக்கம்
இந்திய அணியின் கேப்டன் ஆன விராட் கோஹ்லி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது குறித்து பேசியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1என்ற சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது தான் தோல்விக்கு காரணம் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அது குறித்து கோஹ்லி கூறுகையில், இப்போட்டியில் முதலில் பேட்டிங் தேர்வு செய்ததில் எந்த ஒரு தவறும் இல்லை. அதை நினைத்து நான் வருந்தவும், இல்லை. மைதானம், பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருப்பதை போன்றே எங்களுக்கு தெரிந்தது.
இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது ஆடுகளம் எப்படி இருந்தது என்பதை அனைவரும் பார்த்தோம். இங்கிலாந்து அணி இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடியது, அவர்களை போன்று நாங்கள் விளையாட தவறிவிட்டோம் என்பது தான் உண்மை.
இங்கிலாந்து ஆடுகளங்களில் இது போன்று நடப்பது இயல்பு தான். ஆனால் இங்கிலாந்து அணி இந்த வெற்றிக்கு முழு தகுதியானது, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் எங்களை நெருக்கடிக்குள் வைத்து கொண்டனர்.
குறிப்பாக போட்டியின் மூன்றாம் நாளான ஆட்டத்தில் அவர்களின் பந்துவீச்சை எங்களால் அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை. எங்களது பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர். தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் செயல்படுவோம் என கூறியுள்ளார்.