பேயாட்டம் ஆடிய கோலி... அதிரடியாக வெற்றியை பதிவு செய்த பெங்களூரு
ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
கிளாசென் 49பந்துகளில் சதம்
நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதனையடுத்து ஐதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி ஆகியோர் களமிறங்கினர்.
அபிஷேக் ஷர்மா 11 ஓட்டங்கள், ராகுல் திரிபாதி 15 ஓட்டங்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென், மார்க்ரம் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர்.
ஹென்ரிச் கிளாசென் அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்தார். மறுபுறம் மார்க்ரம் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹார்ரி புரூக் கிளாசெனுடன் இணைந்து சிறப்பாக ஆடினார்.
தொடர்ந்து அதிரடி;காட்டிய கிளாசென் பெங்களூரு பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 49பந்துகளில் சதம் அடித்தார், இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்தது.
விராட் கோலி 63 பந்துகளில் சதம்
கிளாசென் 51 பந்துகளில் 104 ஓட்டங்கள் குவித்து ஹர்ஷல் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார். ஹார்ரி புரூக் 19 பந்துகளில் 27 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இதனையடுத்து 187 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களுரு அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் தொடக்கம் முதலே பேயாட்டம் ஆடினர்.
ஐதராபாத் பந்துவீச்சை மொத்தமாக நொறுக்கினர். இதில் விராட் கோலி 63 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் சதம் அடித்து புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
டு பிளசிஸ் 47 பந்துகளில் 71 ஓட்டங்கள் குவித்து நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து கிளென் மாக்ஸ்வெல் மற்றும் மைக்கேல் பிராஸ்வெல் ஆகியோர் பெங்களூரு அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றனர்.
இறுதியில் 4 பந்துகள் எஞ்சியிருக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றியை பதிவு செய்தது.