இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கோஹ்லி
இங்கிலாந்தின் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த 2016 முதல் விராட் கோஹ்லியை வீழ்த்த முடியாமல் திணறி வருகிறார்.
விராட் கோஹ்லியால் 2014 இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தை மறக்க முடியாது. 5 டெஸ்டுகள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து அணி வென்றது.
இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோஹ்லி மிக மோசமாக விளையாடினார். 5 டெஸ்டுகளில் 134 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
அதிகபட்சமாக 39 ஓட்டங்கள். இரு முறை டக் அவுட் ஆனார். இந்தத் தொடரில் ஆண்டர்சன் பந்துவீச்சில் 4 முறை ஆட்டமிழந்தார் கோஹ்லி. 50 பந்துகளை எதிர்கொண்டு 19 ஓட்டங்கள் மட்டும் எடுத்தார்.
இதற்குப் பிறகு ஆண்டர்சனை வேறுவிதமாக எதிர்கொள்ள ஆரம்பித்தார் கோஹ்லி.
2016 முதல் ஆண்டர்சனின் 382 பந்துகளை எதிர்கொண்ட கோஹ்லி ஒருமுறை கூட அவர் பந்துவீச்சில் ஆட்டமிழக்கவில்லை. இதில் 183 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
2016-ல் இங்கிலாந்து அணி இந்தியாவில் 5 டெஸ்டுகளில் விளையாடி 0-4 எனத் தோற்றது. இதில் ஒருமுறை கூட ஆண்டர்சனிடம் விக்கெட்டைப் பறிகொடுக்கவில்லை கோஹ்லி.
2018-ல் இங்கிலாந்துக்குச் சென்ற இந்திய அணி 1-4 எனத் தோற்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 5 டெஸ்டுகளில் 593 ஓட்டங்கள் குவித்தார் கோஹ்லி. 2 சதங்கள், 3 அரை சதங்கள்.
இந்தத் தொடரிலும் ஆண்டர்சனின் 270 பந்துகளை எதிர்கொண்டு 114 ஓட்டங்கள் எடுத்தார். ஒருமுறை கூட ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழக்கவில்லை.
இதனால், கடந்த இரு தொடர்களிலும் இங்கிலாந்து அணிக்கு மட்டுமல்லாமல் ஆண்டர்சனுக்குப் பெரும் சவாலாக உள்ளார் விராட் கோஹ்லி.
இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற கோஹ்லியை குறைந்த ஓட்டங்களில் வீழ்த்த வேண்டும். அதற்கு ஆண்டர்சன் உதவ வேண்டும்.
ஆனால் 2016 முதல் ஆண்டர்சனைத் தோற்கடித்து வருகிறார் கோஹ்லி. இந்த முறையும் கோஹ்லிக்கு வெற்றி கிடைக்குமா என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.