14 இன்னிங்ஸில் 5 சதங்கள், 3 அரைசதங்கள்: அவுஸ்திரேலிய மைதானத்தை சொந்த வீடு போல் நேசிக்கும் விராட் கோஹ்லி
பல மூத்த வீரர்களும் நடுங்கிய அவுஸ்திரேலிய மைதானத்தை மிகவும் நேசிக்கும் விராட் கோஹ்லி.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான டி20 உலகக்கோப்பை 2022-ன் அரையிறுதி ஆட்டம் நாளை நடக்கவுள்ளது.
வெளிநாட்டு வீரர்கள் பலரும் அஞ்சும் அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தை எப்போதும் தன் அதிரடி ஆட்டத்தால் ரணகளமாக்கிய வீரர் என்ற பெருமை விராட் கோஹ்லிக்கு உண்டு.
விராட் கோஹ்லிக்கு மிகவும் பிடித்த இந்த அடிலெய்டு ஓவல் மைதானத்திற்கும் 'கிங்' கோஹ்லிக்கும் இடையிலான உறவை பற்றி இங்கே பார்க்கலாம்.
ஏனெனில் இந்த மைதானத்தில் தான், நாளை (விழக்கிழமை) இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை 2022-ன் அரையிறுதி ஆட்டம் நடக்கவுள்ளது.
வெளிநாட்டு வீரர்களுக்கு மயானமாகக் கருதப்படும் இந்த மைதானத்தில் துடுப்பாட்டக்காரராக ஆதிக்கம் செலுத்தும் நபர் என்றால், அவர் எத்தகைய சிறப்பு வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்று நினைத்து பாருங்கள்.
Photo: © Virat Kohli/ BodyArt
2011/12 அவுஸ்திரேலிய தொடர் நினைவிருக்கிறதா? நான்கு டெஸ்டுகளில் உலகத்தரம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணி, மூத்த வீரர்களை வீழ்த்திய தொடர் அது. ஆனால் கோஹ்லி என்ற ஒரு புதிய நட்சத்திர ஆட்டக்காரர் உருவாகத் தொடங்கிய தொடரும் அதுதான்.
அந்த நான்கு போட்டிகளில் ஒரு சதம் உட்பட 300 ஓட்டங்களை குவித்து இந்திய அணிக்காக அதிக ஓட்டங்களை எடுத்தவர் கோஹ்லி, அதுவும் அடிலெய்டு ஓவல் மைதானத்தில்.
அவுஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் சதம் அடித்தது என்பது சாதாரணம் அல்ல. அதுவே அவுஸ்திரேலியாவிலும் அடிலெய்டு மைதானத்திலும் கோஹ்லியின் ஆதிக்கத்தின் ஆரம்பம்.
டெஸ்டில் 1352 ஓட்டங்கள், ஒரு நாள் போட்டிகளில் 1327 ஓட்டங்கள், டி20 போட்டிகளில் 697* என, இவை அவுஸ்திரேலியாவில் ஒரு வெளிநாட்டு பேட்டருக்கு சில மூர்க்கத்தனமான நல்ல ஸ்கோர் ஆகும். இதில் 907 ஓட்டங்கள் அடிலெய்டு மைதானத்தில் மட்டும் அடித்தது. அடிலெய்டில் விளையாடுவது கோஹ்லிக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த மைதானத்தில் 14 இன்னிங்ஸ்களில் கோஹ்லி 5 சதங்கள் மற்றும் 3 அரை சதங்கள் அடித்துள்ளார்.
AP Photo
2018-19 சுற்றுப்பயணத்தின் போது தனது நேர்காணல் ஒன்றில், கோஹ்லி தன்னால் முடிந்தால், இந்த அடிலெய்டு மேற்பரப்பை போர்வையில் சுருட்டி என் வீட்டிற்கு எடுத்துச் சென்றிருப்பேன் என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு இந்த மைதானத்தை அவர் விரும்புகிறார்.
2014-15 தொடரில் அதே மைதானத்தில் மகேந்திர சிங் தோனி இல்லாதபோது அவர் தனது டெஸ்ட் கேப்டனாக அறிமுகமானார். டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் ஒற்றைக் கையால் சதம் அடித்து, தொடரின் முதல் போட்டியில் அவர் இந்தியாவை வெற்றி பெறச் செய்தார்.
2015-ஆம் ஆண்டு அடிலெய்டில் நடந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் சதத்தை அடித்த அவர், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் சதமும் அடித்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர்-கவாஸ்கர் டிராபி 2020-21 தொடரின் தொடக்க ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 36-ஆல்-அவுட் தோல்வியில், இந்தியாவுக்கு பயங்கரமான இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்பு கோஹ்லி 74 ஓட்டங்கள் எடுத்தார்.
இப்போது, 2022 டி20 உலகக் கோப்பையில், நாளை அடிலெய்டில் இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் நடக்கவுள்ள அரையிறுதி ஆட்டத்தின் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.
கடந்த புதன்கிழமை (நவ.2) வங்காளதேசத்திற்கு எதிராக இதே அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் 64* (44) ஓட்டங்கள் எடுத்தார்.
ஆட்ட நாயகன் விருதை வென்ற பிறகு, மைதானத்தின் மீதான அவரது காதலைப்பற்றி மீண்டும் கோஹ்லியிடம் கேட்கப்பட்டபோது, "இந்த மைதானத்தில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். பின்புறத்தில் உள்ள பயிற்சி வலைகள் முதல், களத்தில் நுழைவது வரை அது எனது வீடு போல என்னை உணர வைக்கிறது.., அடிலெய்டுக்கு வந்து எனது பேட்டிங்கை ரசிக்க வேண்டும் என்பது போல் இருக்கிறது" என்று அவர் கூறினார்.
இந்நிலையில், அடிலெய்டில் நாளைய ஆட்டம் கோஹ்லிக்கும் இந்திய அணிக்கும் சிறப்பானதாக அமைந்தால், இந்த உறவு இன்னும் இனிமையாக மாறும்.