58 பந்தில் 100 விளாசியும் வீண்: சம்பவம் செய்த கோஹ்லி, படிக்கல்..அவர்கள் கூறிய விடயம்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சாய் சுதர்சன் அதிரடி சதம்
ஐபிஎல் 2026 தொடரின் நேற்றையப் போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கில் 32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடிய சாய் சுதர்சன் 58 பந்துகளில் 100 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.
பின்னர் ஜோஸ் பட்லர் 25 (16) ஓட்டங்களும், ஹோல்டர் 23 (10) ஓட்டங்களும் விளாச, குஜராத் டைட்டன்ஸ் 205 ஓட்டங்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில் விராட் கோஹ்லி (Virat Kohli) மற்றும் தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) கூட்டணி குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தது.
கோஹ்லி 81, படிக்கல் 55
இந்தக் கூட்டணியின் அதிரடியில் பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் 206 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது. கோஹ்லி 44 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்களும், தேவ்தத் படிக்கல் 27 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்களும் விளாசினர்.
கடைசி கட்டத்தில் க்ருனால் பாண்டியா 12 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
வெற்றிக்கு பின் பேசிய கோஹ்லி, "அடிக்கக்கூடிய ஒரு பந்து உங்கள் கண்ணில் பட்டால், உங்கள் திறமையை நீங்களே நம்பி, துணிச்சலாக அதை அடித்து விளையாடுங்கள்; ஏனெனில், எங்களிடம் துடுப்பாட்ட ஆழம் போதுமான அளவு உள்ளது. அதோடு, எங்கள் அணியினரிடையே பரஸ்பர நம்பிக்கையும் நிறைந்துள்ளது. இங்குள்ள மைதானத்தில் 5 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.
அதேபோல் படிக்கல் பேசும்போது, "நான் இப்போது இருக்கும் நிலையை அடைய மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன், அதனால் நான் நிறைய முயற்சி செய்திருக்கிறேன். அது இப்போது நல்ல பலனைத் தருவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |