இந்தியாவின் வெற்றிக்கு இந்த 3-பேர் தான் முக்கிய காரணம்! இது எங்கள் பரிசு: கோஹ்லி உருக்கம்
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.
லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 152 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த போட்டி வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி கூறுகையில், பும்ரா மற்றும் ஷமி அதிரடியால் தான் இந்திய அணி 271 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றது.
பந்து வீச்சாளர்கள் பேட்டிங் பயிற்சியும் எடுத்ததுதான் வெற்றி உதவியிருக்கிறது. 60 ஓவர்களில் இங்கிலாந்தை சுருட்ட முடியும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் இருந்தது.
துவக்கதிலேயே இரண்டு விக்கெட்களை வீழ்த்தியதும் நம்பிக்கை அதிகரித்தது. பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாகப் பந்துவீசினார்கள்.
குறிப்பாக முகமது சிராஜ், இவருக்கு லண்டன் லார்ட்ஸில் இதுதான் முதல் போட்டி. அபாரமாகப் பந்துவீசி முக்கிய பேட்ஸ்மேன்களை திணறடித்தார். வெற்றிக்கு இவரது பங்களிப்பும் முக்கிய காரணம்.
கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டு டோனி தலைமையில், லார்ட்ஸ் டெஸ்ட்டில் வென்றோம். தற்போது, 60 ஓவர்களில் ஆல்-அவுட் எடுத்து வெற்றிபெற்றிருப்பது உண்மையில் அற்புதமான உணர்வைத் தருகிறது.
சுதந்திர தினம் நேற்று முடிந்துவிட்டது. இருப்பினும், இதனை எங்கள் பரிசாக நாட்டு மக்களுக்கு அளிக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.