களத்தில் மாஸ் காட்டும் கோலி! இங்கிலாந்து அணி கனவில் மண்ணை அள்ளிப்போட்ட இந்திய அணி... பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 215/2 எடுத்துள்ள நிலையில் கோலி அவுட்டாகாமல் களத்தில் நிற்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 432 ரன்களை குவித்தது.
பின்னர் 3ம் நாளான நேற்றைய ஆட்டத்தின் முதல் செசனில் 354 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் கேஎல் ராகுலும் பொறுப்பை உணர்ந்து நன்றாக தொடங்கினர். இருவரும் இணைந்து முதல் செசனை முடிக்கவிருந்த நிலையில், லன்ச்சுக்கு முந்தைய கடைசி ஓவரின் கடைசி பந்தில் கேஎல் ராகுல் ஓவர்டனின் பந்தில் 8 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
இந்த தொடர் தொடங்கியதிலிருந்தே ஒவ்வொரு இன்னிங்ஸிலும், செசன் முடிவதற்கு முந்தைய கடைசி ஓவரில் விக்கெட்டை இழப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள இந்திய அணி, இந்த போட்டியிலும் லன்ச்சுக்கு முந்தைய கடைசி ஓவரில் ராகுலின் விக்கெட்டை இழந்தது.
2வது செசனில் ரோஹித்துடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். பொதுவாக முதல் ரன் அடிக்கவே அதிக நேரமும் அதிக பந்துகளும் எடுத்துக்கொள்வார். ஆனால் இந்த இன்னிங்ஸில் களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடினார் புஜாரா. ரோஹித்தும் புஜாராவும் இணைந்து பொறுப்புடன் ஆடி 2வது விக்கெட்டுக்கு 82 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ரோஹித் சர்மா 59 ரன்னில் ஆட்டமிழந்தார்.
புஜாராவுடன் கோலி ஜோடி சேர, புஜாராவும் அரைசதம் அடித்தார். கோலி இந்த தொடரில் இதற்கு முந்தைய இன்னிங்ஸ்களில் சொதப்பியதையெல்லாம் மறந்துவிட்டு, தனது இயல்பான பேட்டிங்கை தெளிவாக ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார்.
புஜாராவும் அடித்து ஆட அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அதிரடியாக ஆடிய புஜாரா 91 ரன்களுடனும், கோலி 45 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் அடித்திருக்க 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
தொடர்ந்து சொற்ப ரன்களில் அவுட்டாகி வரும் கோலி இந்த முறை அவுட்டாகாமல் களத்தில் நிற்கும் நிலையில் அவர் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் சதமடித்து பழைய பார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அதே போல 354 ரன்கள் பின் தங்கிய இந்திய அணியை முதல் இன்னிங்ஸ் போல 2வது இன்னிங்ஸிலும் சுருட்டி, எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என இங்கிலாந்து அணியினர் கண்ட கனவில் இந்திய வீரர்கள் மண்ணை போட்டுள்ளனர்.
இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
It's Stumps on Day 3 of the 3⃣rd #ENGvIND Test at Headingley!
— BCCI (@BCCI) August 27, 2021
A solid & gritty batting display by #TeamIndia to end the day at 215/2. ?
9⃣1⃣* for @cheteshwar1
5⃣9⃣ for @ImRo45
4⃣5⃣* for captain @imVkohli
Scorecard ? https://t.co/FChN8SDsxh pic.twitter.com/6gisdY7PXi