பந்துவீச்சாளர்கள் அபாரம்: மும்பையை மொத்தமாக முடித்த கொல்கத்தா அணி
15வது ஐபிஎல் தொடரின் 56வது லீக் ஆட்டத்தில் 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து கொல்கத்தா அணி துடுப்பாட்டத்தில் இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ் அய்யரும், ரகானேவும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அய்யர்(43), ரகானே(25) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த நிதிஷ் ரானா அதிரடியாக விளையாடி 43 ஓட்டங்கள் எடுத்தார். அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்ததால், அதிக ஓட்டங்கள் குவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 10 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதையடுத்து 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். 6 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க, மறுமுனையில் இஷான் கிஷன் நிலைத்து நின்று விளையாடினார். அவர் 43 பந்துகளில் 51 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய வீரர்கள் எவரும் சோபிக்காத நிலையில், 17.3 ஓவர்களில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.