ஹசரங்கா சுழலில் சின்னாபின்னமான கொல்கத்தா; 128 ஓட்டங்களில் ஆல்-அவுட்!
பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 128 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் துடுப்பாட களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரகானே 9 ஓட்டங்களிலும் வெங்கடேஷ் ஐயர் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதை தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 13 ஓட்டங்களிலும் ஹசராங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதை தொடர்ந்து நிதிஷ் ராணா 10 ஓட்டங்களிலும் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 67 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய ஹசராங்கா கொல்கத்தா வீரர் ஷெல்டன் ஜாக்சனை அவரது முதல் பந்திலே வெளியேற்றினார். விக்கெட்கள் சரிந்தாலும் ஒருமுனையில் அதிரடி காட்டினார் ஆண்ட்ரே ரஸ்ஸல். அவர் 18 பந்துகளில் 25 ஓட்டங்கள் குவித்து ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதி கட்டத்தில் உமேஷ் - வருண் சக்ரவர்த்தி ஜோடி சற்று நிலைத்து நின்று ஓட்டங்கள் குவித்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.
பெங்களூரு அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹசராங்கா 4 ஓவர்கள் வீசி 20 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதன் மூலம் பெங்களூரு அணிக்கு 129 ஓட்டங்களை இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்துள்ளது.