தோழி உயிரிழந்த சோகம்., 2 நாட்களில் வீட்டில் பிணமாக கிடந்த மொடல் அழகி
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் தோழி இறந்த இரண்டு நாட்களில் பிரபல மொடல் அழகி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் பட்டுலி பகுதியில் இன்று மேலும் ஒரு மொடல் அழகி அவரது வீட்டில் இறந்து கிடந்ததாகவும், இது கடந்த 3 நாட்களில் நடந்த இரண்டாவது சம்பவம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஞ்சுஷா நியோகி (Manjusha Neogi) என அடையாளம் காணப்பட்ட அந்த மொடல் அழகி, இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரது தோழியும் தொழில்துறையில் சக ஊழியருமான பிதிஷா டி மஜூம்டர் (Bidisha De Majumder) இறந்த பிறகு "கடுமையான மன அழுத்தத்தால்" பாதிக்கப்பட்டதாக அவரது தாயார் கூறினார்.
மணப்பெண் மேக்கப் போட்டோ ஷூட்களில் பிரபலமான பிதிஷா மஜூம்டர், கொல்கத்தாவின் டம்டம் பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பில் புதன்கிழமை மாலை இறந்து கிடந்தார்.
இந்நிலையில், மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய நியோகியின் உடல் தடயவியல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது என்று ஒரு பொலிஸ் அதிகாரி கூறினார்.
"எனது மகள் தனது தோழி பிடிஷாவின் மரணத்தைத் தொடர்ந்து கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளானாள், அன்றிலிருந்து அவளைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்" என்று நியோகியின் தாய் கூறினார்.
பதினைந்து நாட்களுக்கு முன்னதாக, பிரபல தொலைக்காட்சி நடிகரான பல்லபி டே (Pallabi Dey) கொல்கத்தாவின் கர்ஃபா பகுதியில் உள்ள தனது வாடகை குடியிருப்பில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இம்மாதத்தில் இதுவரை ஒரே தொழிற்துறையைச் சார்ந்த 3 பெண்கள் தங்கள் வீடுகளில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவங்கள் கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.