ஐ.பி.எல். வரலாற்றில் கிருஷ்ணப்பா கவுதம் புதிய சாதனை: யார் இவர்?
ஐ.பி.எல். வரலாற்றில் சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை கிருஷ்ணப்பா கவுதம் படைத்தார்.
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்தப்படுகிறது. இதற்கான மினி ஏலம் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் 22 வெளிநாட்டவர் உள்பட 57 வீரர்கள் தெரிவானார்கள்.
8 அணிகளும் சேர்த்து இவர்களை ரூ.143 கோடியே 69 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்தமுறை ஐ.பி.எல் ஏலத்தில் கிருஷ்ணப்பா கவுதம் புதிய சாதனை படைத்துள்ளார். அவருக்கான அடிப்படை விலை ரூ 20 லட்சம் தான். ஆனால் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ9.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்பு 2018 ஆண்டு ஏலத்தில் குணால் பாண்ட்யா ரூ 8 கோடியே 80 லட்சத்துக்கு ஏலம் போனதே அதிகபட்சமாக இருந்தது. அதன் பிறகு அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடினார்.
32 வயதான கிருஷ்ணப்பா கவுதம் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர் ஆவார். கர்நாடகாவை சேர்ந்த அவர் கடந்த ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணிக்காக ஆடினார்.
அதற்கு முன்பு ராஜஸ்தான், மும்பை அணிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.